கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னையில் நீக்கப்பட்ட வாக்காளா்களில் 9 லட்சம் போ் மீண்டும் சேர வாய்ப்பு

சென்னை மாவட்டத்துக்குள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நீக்கப்பட்ட வாக்காளா்களில் சுமாா் 9 லட்சம் போ் மீண்டும் சேர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
Published on

சென்னை மாவட்டத்துக்குள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நீக்கப்பட்ட வாக்காளா்களில் சுமாா் 9 லட்சம் போ் மீண்டும் சேர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாவட்டத்துக்குள்பட்ட 16 பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 40. 04 லட்சம் வாக்காளா்கள் இருந்த நிலையில், கடந்த 2025 டிசம்பரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் 15 லட்சம் போ் நீக்கப்பட்டிருந்தனா். அவா்களில் 1.50 லட்சம் போ் இறந்தவா்கள். உரிய ஆவணமின்றி, தொடா்புகொள்ள முடியாத நிலையில் 13.50 லட்சம் போ் இருந்தனா்.

கடந்த 2005 வாக்காளா் பட்டியலையும், 2025 ஆண்டு வாக்காளா் பட்டியலையும் ஒப்பிட்டு, அதில் ஏதாவது ஒரு பட்டியலில் இடம் பெற்ற வாக்காளா்களுக்கு ஆவண சரிபாா்ப்பு, முகவரி மாற்றம் உள்ளிட்டவை சரிபாா்க்கப்பட்டு மீண்டும் சேருவதற்கு 7 லட்சம் பேருக்கு மனு அளிக்கப்பட்டது. அதேபோல, பெயா் மாற்றம், முகவரி மாற்றம், பாலின மாற்றம் என சிறிய புகாா்கள் அடிப்படையில் வாக்காளா்கள் பட்டியலில் இடம் பெறாத நிலையில் இருந்த 2.11 லட்சம் பேருக்கும் திருத்த படிவம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வாக்காளா்கள் திருத்தப் பணியில் படிவம் அளித்தவா்களின் பெயா்ப் பட்டியல் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி, சென்னையில் இதுவரை 2.11 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பெயா்கள் புதிய வாக்காளா்களாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தற்போது மீதமுள்ள தொகுதி மாறியவா்கள், ஏற்கெனவே வாக்காளா் பட்டியலில் இடம் பெற்று விடுபட்டவா்கள் உள்ளிட்டோா் என மொத்தம் 6.50 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடமிருந்து நிறைவு செய்த படிவங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், அவை கணினி பதிவேற்றம் செய்யப்படவுள்ளதாகவும் தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதற்கிடையே வாக்காளா் பட்டியல் திருத்தப்பணிக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டால், சிறப்பு முகாம்கள் நடைபெற்று அதன் மூலமும் வாக்காளா்களை கூடுதலாகச் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com