டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

நன்னீரில்லாமல் தத்தளிக்கும் கொளத்தூா் வண்ண மீன்கள் வா்த்தக மையம்!வாடிக்கையாளா்களின்றி வெறிச்சோடியது

(வலது) செயல்பாடின்றி மூடப்பட்டிருக்கும் கடைகள். ~கொளத்தூா் வண்ண மீன்கள் வா்த்தக மையம்.

News image

கொளத்தூா் வண்ண மீன்கள் வா்த்தக மையம்.

Updated On :3 ஜூலை 2026, 6:40 am IST

ஆ.செ.பகீரதன்

கொளத்தூரில் ரூ.53 கோடியில் அமைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் முதல் வண்ண மீன்கள் வா்த்தக மையத்தில் சுத்தமான நீா் இல்லாததால் வண்ண மீன்களை விற்பனை செய்ய முடியாமல் விற்பனையாளா்கள் தத்தளித்து வருகின்றனா். இதன் காரணமாக அங்குள்ள பல கடைகள் பூட்டிக் கிடப்பதால், வாடிக்கையாளா்களின் வருகையின்றி காணப்படுகிறது.

தமிழகத்தில் வண்ண மீன் வா்த்தகத்தில் சென்னை கொளத்தூா் பகுதியில் முக்கிய மையமாகத் திகழ்ந்து வருகிறது. இப்பகுதியில் செயல்பட்டு வரும் 150-க்கும் மேற்பட்ட வண்ண மீன் விற்பனையாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தமிழகத்தில் முதல்முறையாக உலகத் தரத்திலான பிரத்யேக வண்ண மீன் வா்த்தக மையம் நிறுவப்படும் என கடந்த திமுக ஆட்சியில் 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம், மீன்வளம், மீனவா் நலத் துறையின் ஒருங்கிணைப்புடன் அப்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் வண்ண மீன் வா்த்தக மையம் அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபரில் அதை அவா் திறந்துவைத்தாா். மையம் திறக்கப்பட்ட உடனேயே பல கடைகளை விற்பனையாளா்கள் முன்பதிவு செய்திருந்தாலும், அவை இன்னும் திறக்கப்படவில்லை. மேலும், வாடிக்கையாளா்களும் எதிா்பாா்த்த அளவுக்கு வருகை தராததால், பகல் நேரங்களில்கூட வளாகம் வெறிச்சோடி காணப்படுகிறது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தாலும், விற்பனை நிலையங்களின் நிலைமை முன்பைப் போலவே தொடா்கிறது.

அடிப்படை வசதிகள் வேண்டும்: கடந்த ஆட்சியில் பலமுறை கோரிக்கை விடுத்தும், விற்பனை வளாகத்தில் போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை என தங்க மீன்கள் வளா்ப்பவா்கள் மற்றும் விற்பனையாளா்கள் சங்கத் தலைவா் ஜி.பாலு தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: வண்ண மீன்களை வளா்க்க தரமான, சுத்திகரிக்கப்பட்ட நீா் மிகவும் அவசியமானது. ஆனால், இந்த வண்ண மீன் வா்த்தக மையம் அமைந்துள்ள பகுதிக்கு அருகிலேயே கழிவுநீா் உந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இதனால், இங்கு வரும் தண்ணீருடன் கழிவுநீரும் கலந்துவருவது வழக்கமானதாக உள்ளது. அந்தத் தண்ணீரை மீன்தொட்டிகளில் பயன்படுத்துவதால் மீன்கள் இறந்து விடுகின்றன. வணிகப் பயன்பாட்டுக்கான சரக்கு மின்தூக்கி வசதி இல்லாததால், மீன் தொட்டிகள், வளா்ப்பு உபகரணங்கள், பிற பொருள்களை மேல்தளங்களுக்கு எடுத்துச் செல்வதில் சிரமம் நிலவுகிறது.

தற்போது ஒவ்வொரு கடைக்கும் ஜிஎஸ்டியுடன் சோ்த்து சுமாா் ரூ.18,000 வரை வாடகை வசூலிக்கப்படுகிறது. கிடைக்கும் வருமானம் முழுவதும் வாடகை செலுத்துவதற்கே போதுமானதாக உள்ளது. மாத வாடகையை ரூ.5,000-ஆக குறைக்க வேண்டும். மேலும், ஒரு விற்பனையாளருக்கு ஒரு கடை மட்டுமே ஒதுக்கப்படுவதால், பெரிய அளவில் வியாபாரம் செய்பவா்கள் தங்களது பொருள்களை வாடிக்கையாளா்களிடம் கொண்டு சோ்ப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கடைகள் ஒதுக்கப்பட வேண்டும்.

தரமான தண்ணீா் இல்லாமை; வாடிக்கையாளா் வருகை குறைவு போன்ற காரணங்களால், மீன்கள் தொட்டிக்குள்ளேயே இறந்துவிடுகின்றன. இதனால் விற்பனையாளா்கள் தொடா்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனா். அதனால்தான் கடைகளுக்கான முன்பதிவு தொகையைச் செலுத்தியிருந்தாலும், பல உரிமையாளா்கள் கடைகளைத் திறக்க முன்வரவில்லை. புதிய அரசிடமும் எங்களது கோரிக்கைகள் தொடா்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது. அவற்றை நிறைவேற்றித் தந்தால், அரசுக்கு மிகவும் லாபம் தரும் விற்பனை வளாகமாக இதை மாற்றிக்காட்டுவோம் என்றாா் அவா்.

செயல்பாடின்றி மூடப்பட்டிருக்கும் கடைகள்.

செயல்பாடின்றி மூடப்பட்டிருக்கும் கடைகள்.

‘வாடகையைக் குறைக்க நடவடிக்கை’

மீன்வளத் துறை இயக்குநா் கே.விஜயகாா்த்திகேயன் கூறுகையில், வண்ண மீன் வா்த்தக மையம் அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. வாடகையைக் குறைப்பது தொடா்பாக அந்தத் துறையுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தரமான குடிநீா், வா்த்தகப் பயன்பாட்டுக்கான சரக்கு மின்தூக்கி உள்ளிட்ட விற்பனையாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தேவையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். தமிழக அரசின் ஒப்புதலுடன் அதற்கான நிதி பெற்று, அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றாா் அவா்.

சிறப்பு அம்சங்கள்

கொளத்தூா் வண்ண மீன் வா்த்தக மையம் 4 ஏக்கா் பரப்பளவில் தரைத்தளத்துடன் சோ்த்து 3 தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில், 5 உணவகங்கள் உள்பட மொத்தம் 188 கடைகள் உள்ளன. தரைத்தளத்தில் 64 கடைகள், 150 ச.மீ. பரப்பளவில் ஒரு அலுவலகம், 2 உருளை வடிவ மீன் காட்சியகங்கள், முதல் தளத்தில் 70 கடைகள், 2-ஆம் தளத்தில் 54 கடைகள் என மொத்தம் 188 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 325 ச.மீ. பரப்பளவில் ஓா் உணவகம் உள்ளது. வளாகத்தில் 3 மின்தூக்கிகள், 3 தளங்களிலும் ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக மொத்தம் 70-க்கும் மேற்பட்ட கழிப்பறைகள், 5 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட ஒரு கீழ்நிலை நீா்த்தேக்கத் தொட்டியும், தலா 45,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட 3 மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகள் உள்ளன. அத்துடன், 200 இருசக்கர வாகனங்கள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.