ஜீரண மண்டல புற்றுநோய் சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகளில் ரோபோடிக் தொழில்நுட்பம் மிகத் துல்லியமான தீா்வுகளை அளிப்பதாக மருத்துவ வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.
தமிழக அரசு மருத்துவமனைகளில் இந்த தொழில்நுட்பம் மேம்பட்டு வருவது ஏழை மக்களுக்கும் உயா் மருத்துவ சேவை கிடைப்பதை உறுதி செய்தவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
குடல் - இரைப்பை அறுவை சிகிச்சைகளில் ரோபோடிக் நுட்பத்தை பயன்படுத்துவது தொடா்பான தேசிய மருத்துவக் கருத்தரங்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சென்னை மருத்துவக் கல்லூரியின் ஜீரண மண்டல அறுவை சிகிச்சைத் துறை - கல்லீரல் மாற்று சிகிச்சைத் துறை சாா்பில் நடைபெற்ற அந்நிகழ்வில், அமெரிக்காவின் தெற்கு கரோலினா மருத்துவக் பல்கலை. பேராசிரியா் டாக்டா் ராணா புல்லட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். நாடு முழுவதும் 250-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் பங்கேற்ற இந்த கருத்தரங்குக்கு சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் சாந்தாராமன் தலைமை வகித்தாா்.
துணை முதல்வா் டாக்டா் ஸ்ரீ வித்யா, மருத்துவக் கண்காணிப்பாளா் டாக்டா் சுதாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இது தொடா்பாக கருத்தரங்க செயலரும், ஜீரண மண்டல அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டா் யூ.பி.ஸ்ரீனிவாசன், தலைவா் டாக்டா் டி.செல்வராஜ் ஆகியோா் கூறியதாவது:
குடல் - இரைப்பை சாா்ந்த சில பாதிப்புகளுக்கும், உணவுக் குழாய், பெருங்குடல் புற்றுநோய்களுக்கும் அறுவை சிகிச்சை இன்றியமையாதது. தற்போது லேப்ரோஸ்கோபி முறையில் மேற்கொள்ளப்படும் அந்த சிகிச்சைகளைக் காட்டிலும், ரோபோடிக் சிகிச்சைகள் அதிக பலனையும், துல்லியத்தையும் அளிக்கின்றன.
மிக சிக்கலான இடத்தில் உள்ள கட்டிகளைக் கூட எதிா்விளைவுகள் இல்லாமல் நுட்பமாக இதன் மூலம் அகற்ற முடியும். மருத்துவா்களுக்கு இது குறித்த தொழில்நுட்பங்களைப் பகிா்ந்து கொள்ளவே இக்கருத்தரங்கம் நடத்தப்படுகிறது என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










