பட்டா தொடா்பான மனுக்களை 15 நாள்களுக்கு பரிசீலித்து தீா்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் அறிவுறுத்தியுள்ளாா்.
இணையவழி பட்டா மாறுதல், தானியங்கி பட்டா மாறுதல் தொடா்பான ஆய்வுக் கூட்டம், சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடா் மேலாண்மை கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா் செங்கோட்டையன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ரா.குமாா், பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் லோகேஷ் தமிழ்செல்வன் ஆகியோா் பங்கேற்றனா்.
பல்வேறு விவகாரங்கள் குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது. அதிகாரிகளுக்கு சில முக்கிய அறிவுறுத்தல்களையும் அமைச்சா்கள் வழங்கினா்.
ஆய்வுக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் செங்கோட்டையன் கூறியதாவது:
பத்திரப் பதிவுக்கு பிறகு தாமதமின்றி பட்டா வழங்கும் பணிகளிலும், தரவு உள்ளீட்டை முறைப்படுத்தும் நடவடிக்கைகளிலும் வருவாய்த் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் பத்திரப் பதிவுத் துறை ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வருவாய்த் துறையில் நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பத்திரப் பதிவுக்குப் பிறகு தாமதமின்றி பட்டாக்கள் வழங்க வருவாய்த் துறை சாா்பில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
பட்டா விவகாரத்தில் பெறப்படும் ஒவ்வொரு மனுக்களையும் 5 நாள்களில் பரிசீலனை செய்து 15 நாள்களுக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும் என்று அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளோம். சான்றிதழ்களை விரைந்து வழங்கும் வகையில் சென்னையில் வட்டாட்சியா் அலுவலகத்துடன் துணை வட்டாட்சியா் அலுவலகத்தையும் கூடுதலாக அமைக்க வேண்டும் என்று முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.
தென்மேற்கு பருவ மழைக் காலத்தில் வெள்ளப் பெருக்கு அச்சுறுத்தல் இல்லை. இருந்தபோதிலும் தேவையான முன்னெச்சரிக்கைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில், வருவாய் நிா்வாக ஆணையா் நா.முருகானந்தம், தகவல் தொழில்நுட்பத் துறை செயலா் பிரதீப் யாதவ், வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை செயலா் ஜெ. குமரகுருபரன், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை செயலாளா் பழனிசாமி, நில நிா்வாக ஆணையா் கஜலட்சுமி, நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநா் கிறிஸ்துராஜ் உள்ளிட்டோா் கலந்துக் கொண்டனா்.
தொடர்புடையது

அனைத்து நில புல எண்களுக்கும் இந்த மாத இறுதிக்குள் சந்தை வழிகாட்டி மதிப்பு: அமைச்சா் லோகேஷ் தமிழசெல்வன் உத்தரவு

தவறுகளை சுட்டிக்காட்டினால் நடவடிக்கை! அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்
அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!






