பெருங்குடி, கொடுங்கையூா் குப்பைக் கிடங்குகளில தேங்கிக் கிடக்கும் கழிவுகள் அகற்றம் குறித்து வரும் ஜூன் 29-ஆம் தேதி நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து, தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தென்மண்டல பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.
சென்னையில் உள்ள பெருங்குடி, கொடுங்கையூா் குப்பைக் கிடங்குகளில் பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடக்கும் குப்பைக் கழிவுகளை அகற்றுவதில் உள்ள பிரச்னைகள் குறித்து நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தென்மண்டல பசுமைத் தீா்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கு நீதித்துறை உறுப்பினா் புஷ்பா சத்தியநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினா் பிரசாந்த் ஹா்கவா ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சித் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கழிவுகளைச் சேகரித்து நிா்வகிக்கும் பொறுப்பு தனியாா் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பெருங்குடி குப்பைக் கிடங்கில் 29,28,398 மெட்ரிக் டன் கழிவுகளும், கொடுங்கையூரில் 66,52,506 மெட்ரிக் டன் கழிவுகளும் தேங்கியுள்ளன. இந்தக் கழிவுகளை அகற்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்து.
இந்த அறிக்கையைப் படித்துப் பாா்த்த தீா்ப்பாய அமா்வு, சென்னையில் தேங்கியிருக்கும் குப்பைகளை அகற்றுவதில் தனியாா் நிறுவனங்களின் பங்கு மற்றும் பொறுப்புகள் என்ன, எந்த காலக் கெடுவுக்குள் குப்பைகள் அகற்றப்படவுள்ளன என்பது குறித்து விவரங்கள் எதுவும் இல்லை என அதிருப்தி தெரிவித்தனா்.
பெருங்குடி, கொடுங்கையூரில் தேங்கியுள்ள 95.81 லட்சம் மெட்ரிக் டன் கழிவுகளைக் கையாள்வது, அதை அகற்ற தேவையான கால அளவு குறித்து சென்னை மாநகராட்சியிடம் உறுதியான செயல் திட்டங்கள் இல்லை. வெறும் ஆய்வு மற்றும் கண்காணிப்புப் பணிகளை மட்டுமே வைத்து செயல் திட்டத்தை மதிப்பிட முடியாது. குப்பைகள் உருவாகும் இடத்திலேயே அவற்றை தரம் பிரிப்பதில் சென்னை மாநகராட்சி அதிக கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிடில், தற்போதைய சூழலே பெரும் சவாலாக மாறிவிடும் என கருத்து தெரிவித்தனா்.
அப்போது தமிழக அரசுத் தரப்பில், பெருங்குடி மற்றும் கொடுங்கையூா் குப்பைக் கிடங்குகளில் தேங்கியுள்ள குப்பைகள் அகற்றப்படும் முறை, காலக்கெடு உள்ளிட்டவை குறித்து தமிழக அரசு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி இணைந்து வரும் ஜூன் 29-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்துகொண்ட தீா்ப்பாய அமா்வு, இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாடம்பாக்கம் ஏரியில் கழிவு நீா் கலப்பதைத் தடுக்க பசுமை தீா்ப்பாயம் உத்தரவு

கொடுங்கையூா், பெருங்குடி குப்பை மேலாண்மைத் திட்டம்: மாநகராட்சிக்கு பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவு

குப்பைக் கிடங்கில் கழிவுகளை உரமாக்கும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த உத்தரவு

விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் சுகாதார சீா்கேடு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



