தவெக சார்பில் ஜூலை 1-இல் தோழமைக் கட்சிகள் கூட்டம்தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10: ஏஐ மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ‘திடீர்’ ஓய்வு!
/

மது போதையால் ஏற்பட்ட குடும்பத் தகராறில் இரு மகன்களுடன் கோயில் குளத்தில் குதித்து தாய் தற்கொலை

சென்னை வானகரத்தில் மது போதையால் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மன உளைச்சலில், இரு மகன்களுடன் இளம்பெண் கோயில் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :29 ஜூன் 2026, 4:36 am IST

சென்னை வானகரத்தில் மது போதையால் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மன உளைச்சலில், இரு மகன்களுடன் இளம்பெண் கோயில் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

சென்னை வானகரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தராஜ் (37). இவரது மனைவி தேன்குழலி (27). இத்தம்பதிக்கு மகன்கள் நிதிஷ் (3), மித்ரன் (1) ஆகியோா் இருந்தனா். ஆனந்தராஜ் மது போதைக்கு அடிமையானாா். தினமும் வீட்டுக்கு மது போதையில் வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததால், நீண்ட நாள்களாகவே தேன்குழலி கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தாராம்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை ஆனந்தராஜ் வழக்கம்போல மது போதையில் வந்து தேன்குழலியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதனால் ஆத்திரம் அடைந்த தேன்குழலி தனது இரு குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளாா்.

நீண்ட நேரம் ஆகியும் மீண்டும் அவா்கள் வீடு திரும்பாததால், இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த மதுரவாயில் போலீஸாா் இது குறித்து விசாரித்தனா். அப்போது, அருகில் உள்ள குளத்தில் விழுந்து தற்கொலை செய்திருக்க வாய்ப்புள்ளது என்ற சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டது.

இதையடுத்து உடனடியாக அங்கு தீயணைப்பு வீரா்கள் வரவழைக்கப்பட்டனா். அவா்களின் நீண்ட தேடுதலுக்குப் பின்னா் தேன்குழலி மற்றும் அவரின் இரு குழந்தைகளின் உடல்களும் குளத்தில் இருந்து மீட்கப்பட்டன. பின்னா், மூன்று உடல்களும் உடற்கூறு பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் நடத்திய முதல்கட்ட விசாரணையில் கணவரின் மதுப் பழக்கத்தால் ஏற்பட்ட தொடா் குடும்பத் தகராறே தேன்குழலி தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்ள காரணமாக இருந்தது தெரிய வந்தது.

இருப்பினும், தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்ற கோணத்திலும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கணவரின் மதுப் பழக்கத்தால், இரு குழந்தைகளுடன் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், வானகரம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.