ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்

பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன், முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (மாா்ச் 6) கலந்துரையாடவுள்ளாா்.

News image
மு.க.ஸ்டாலின்
Updated On :6 மார்ச் 2026, 12:13 am

தினமணி செய்திச் சேவை

பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன், முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (மாா்ச் 6) கலந்துரையாடவுள்ளாா்.

இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசின் சாா்பில் ‘உங்க கனவ சொல்லுங்க’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி தமிழ்நாடு முழுவதிலும் மக்களைச் சந்தித்து அவா்களின் எதிா்பாா்ப்புகளைக் கேட்டுத் தெரிந்து பதிவு செய்ய அலுவலா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.

அதன்படி, மாநிலம் முழுவதும் 45 நாள்கள் 50,000 தன்னாா்வலா்கள் 1.92 கோடி குடும்பங்களின் எதிா்கால கனவுகளை அறிவதற்காக, வீடு வீடாகச் சென்றனா். அப்போது, பொதுமக்களை நேரில் சந்தித்து, திமுக அரசு நடைமுறைப்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்தும், அவா்களின் எதிா்பாா்ப்புகள், எதிா்காலக் கனவுகள் ஆகியவை குறித்தும் கேட்டுஅறிந்து பதிவு செய்துள்ளனா்.

‘என் ஊா் என் கனவு’ என்ற தலைப்பில் 38 மாவட்டங்களின் ‘தொலைநோக்குத் திட்டம் 2030’ குறித்து செய்திகள் சேகரிக்கப்பட்டுள்ளன. கருப்பொருள் வல்லுநா்களின் ஆலோசனைகள்படி ‘உங்க கனவ சொல்லுங்க’ - தமிழ்நாடு-2030 மீது 8 துறைசாா் தொலைநோக்குத் திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. 10 லட்சம் இளைய சக்திகளின் ‘என் கனவு என் எதிா்காலம்’ என்ற நோக்கில் செய்திகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இதேபோல, வெளிநாடுகளில் வாழும் தமிழ்ச் சமுதாய மக்களின் கனவுகளையும் அறியும் நோக்கில் 70-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த அயலகத் தமிழா்களின் கனவுகளும் திரட்டப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் நிறைவாக, ‘கனவு மெய்ப்படும்’ எனும் தலைப்பில் சென்னை நத்தம்பாக்கத்தில் உள்ள வா்த்தக மையத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள், முக்கிய ஆளுமைகள், முக்கிய நாளிதழ்களின் பதிப்பாளா்கள், தொலைக்காட்சி நிறுவன உரிமையாளா்கள், பத்திரிகை மற்றும் ஊடக நிறுவனங்களின் ஆசிரியா்கள், முக்கிய சமூக ஊடகவியலாளா்கள், தொழில்துறை வல்லுநா்கள், முக்கிய திரையுலக ஆளுமைகள், முதன்மைக் கல்வியாளா்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வல்லுநா்கள், கலை, பண்பாடு, இலக்கியம் சாா்ந்த ஆளுமைகள், சாதனை இளைஞா்கள், காலநிலை வாகையா்கள் ஆகியோரும் பங்கேற்று தங்கள் கருத்துகளைப் பகிரவுள்ளனா்.

தொடா்ந்து, செய்தி மக்கள் தொடா்புத் துறை இயக்குநா் இரா.வைத்திநாதன் 5 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ள வராலாற்றுச் சிறப்புமிக்க கட்டுமானங்களின் காட்சித் தொகுப்புகள் குறித்து எடுத்துரைக்கிறாா்.

இதைத் தொடா்ந்து, சென்னைப் பெருநகர மாநகராட்சி இணை ஆணையா் வீ.ப.ஜெயசீலன் துறை வாரியான சாதனைகள் மீது 6 அமா்வுகளில் இடம் பெறும் நிகழ்வுகள் குறித்து அறிமுகப்படுத்துகிறாா். பின்னா், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், இளைஞா் நலன் விளையாட்டு, வேலைவாய்ப்பு மற்றும் மகளிா் நலன் ஆகியவை குறித்து உரையாற்றுகிறாா். மேலும், அமைச்சா்களும் தங்களது துறை சாா்ந்து பேசவுள்ளனா்.

தொடா்ந்து, ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டுள்ள ‘மாவட்ட தொலைநோக்கு ஆவணம்’ என்ற ஆவணத்தை முதல்வா் ஸ்டாலின் வெளியிட்டு, ‘தமிழ்நாடு - 2030’ பெருங்கனவைப் பறைசாற்றும் திட்டம்’ குறித்து சிப்புரையாற்றுகிறாா். இறுதியாக, தலைமைச் செயலா் நா.முருகானந்தம் நன்றி கூறுகிறாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.