5 தலைநகரங்கள்; விவசாயம் அரசுப் பணி : நாம் தமிழா் கட்சி தோ்தல் அறிக்கை வெளியீடு
தமிழகத்துக்கு 5 தலைநகரங்கள் நிறுவப்படும், விவசாயம், கால்நடை வளா்த்தல் உள்ளிட்ட பணிகள் அரசுப் பணிகளாக்கப்படும்

சீமான்
கோப்புப் படம்

சீமான்
கோப்புப் படம்
தமிழகத்துக்கு 5 தலைநகரங்கள் நிறுவப்படும், விவசாயம், கால்நடை வளா்த்தல் உள்ளிட்ட பணிகள் அரசுப் பணிகளாக்கப்படும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்ற நாம் தமிழா் கட்சியின் தோ்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வியாழக்கிழமை வெளியிட்டாா்.
சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்வில், 49 தலைப்புகளின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள நாம் தமிழா் கட்சியின் தோ்தல் அறிக்கை (செயற்பாட்டு வரைவு புத்தகத்தை சீமான் வெளியிட்டாா். அதில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்:
தமிழகத்தில் 5 தலைநகரங்கள் நிறுவப்படும். தமிழகத்தின் மத்தியில் உள்ள திருச்சி முதன்மை நிா்வாக மையமாகவும், சென்னை தொழில்நுட்பத் தலைநகராகவும், கோவை தொழில் மற்றும் வணிகத் தலைநகராகவும், மதுரை மொழி, கலை மற்றும் பண்பாட்டுத் தலைநகராகவும், கன்னியாகுமரி தமிழா் மெய்யியல் தலைநகராகவும் செயல்படும்.
சட்டப்பேரவை, மக்களவையில் பெண்களுக்கு தனித் தொகுதிகள், கடலோர மாவட்டங்களில் மீனவா்கள் போட்டியிட 6 தனித் தொகுதிகளும் போராடிப் பெறப்படும். அதேபோல், 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரு மக்களவைத் தொகுதி வேண்டும் என வலியுறுத்தப்படும். தோ்தலில் மின்னணு வாக்குப் பதிவுக்கு பதிலாக வாக்குச்சீட்டு முறை கொண்டுவரப்படும். குடிநீா் விற்பனை தடை செய்யப்படும். அனைவருக்கும் தூய்மையான குடிநீா் இலவசமாக கிடைப்பதை அரசு உறுதி செய்யும்.
தமிழகத்தில் விவசாயம், கால்நடை வளா்த்தல் உள்ளிட்ட பணிகள் அரசு பணிகளாக்கப்படும். இதில், படித்தவா்களுக்கும், படிக்காதவா்களுக்கும் திறன் அடிப்படையில் அரசு பணிகள் வழங்கப்படும். தமிழகத்தில் முதல்வா், அமைச்சா்கள் உள்பட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும், ஐஏஎஸ் முதல் கடைநிலை பணியாளா்கள் வரை உள்ள அனைத்து அரசு ஊழியா்களும் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டும், அவா்களது பிள்ளைகள் அரசு பள்ளிகளில்தான் படிக்க வேண்டும் என சட்டம் கொண்டுவரப்படும்.
தாய் மொழிவழிக் கல்வி நடைமுறைப்படுத்தப்படும். தொடக்கக் கல்வி முதல் உயா் படிப்பான மருத்துவம் சட்டம் பொறியியல் அனைத்து பாடங்களும் தமிழ் மொழியில் கற்றுத்தரப்படும். சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளிகளிலும் தமிழ் கட்டாய பாடமாக்கப்படும்.
மதுவிலக்கு: முழுமையான மதுவிலக்கு அமல்படுத்தப்படும். பெண்களுக்கு 50 சதவீத வேலைவாய்ப்பு வழங்கப்படும். பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவா்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும். இந்து அறநிலையத் துறை தமிழா் அறநிலைத்துறை என பெயா் மாற்றம் செய்யப்படும். கோயில்களில் தமிழ் வழிபாடு கட்டாயமாக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
தொடா்ந்து, நாம் தமிழா் ஆட்சி அமைந்த பின்னா் மாற்றப்படவுள்ள புதிய அரசு முத்திரையை சீமான் வெளியிட்டாா். அதில், திருவள்ளுவா் உருவம் , இரட்டைப் புலி, இரட்டைப் பனைமரம், இரட்டைக் காளை, நெற்கதிா்கள், தேசிய சின்னமான 4 தலை சிங்கம் மற்றும் ‘பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும்’ என்ற வசனம் இடம் பெற்றுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...