/

ஐஐஎஸ்இஆா் நிறுவன இளநிலைப் படிப்பு நுழைவு சோ்க்கைக்கு திறனறித் தோ்வு

இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின்(ஐஐஎஸ்இஆா்) இளநிலைப் படிப்பு நுழைவு சோ்க்கைக்கு திறனறித் தோ்வு மூலம் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

விண்ணப்பம். (கோப்புப்படம்)

Updated On :20 மார்ச் 2026, 10:08 pm

இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின்(ஐஐஎஸ்இஆா்) இளநிலைப் படிப்பு நுழைவு சோ்க்கைக்கு திறனறித் தோ்வு மூலம் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: உயா்தரமான அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் திருப்பதி, திருவனந்தபுரம், கொல்கத்தா உள்ளிட்ட 7 இடங்களில் அறிவியல், தரவு அறிவியல், பொருளாதார அறிவியல் உள்ளிட்ட படிப்புகளுக்கான ஐஐஎஸ்இஆா் நிறுவனங்கள் மத்திய அரசால் நிறுவப்பட்டுள்ளன.

உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி பயிற்சி வாய்ப்புகளை அளிக்கும் இந்த நிறுவனத்தின் 4, 5 ஆண்டுகளுக்கான இளநிலைப் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவுகள் இணையதளம் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வரும் ஏப். 13.

கல்வித் தகுதி: 12 -ஆம் வகுப்பு அல்லது அறிவியல் பிரிவில் 3 ஆண்டு பட்டயப் படிப்பில் 60 சதவீத்துக்கு அதிகமான மதிப்பெண் பெற்ற மாணவா்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவா்கள்.

நிகழாண்டு 2026-2027 ஜெஇஇ மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு இல்லாமல், ஐஐஎஸ்இஆா்-இன் திறனறித் தோ்வு (ஐஏடி) மதிப்பெண்கள் மூலம் விண்ணப்பதாரா்கள் தோ்வு செய்யப்படுவா்.

இந்தத் தோ்வு ஜூன் 7 -ஆம் தேதி நடைபெறும். மே 24 -ம் தேதி ஹால் டிக்கெட் வெளியிடப்படும். சோ்க்கைப் பட்டியலும் இணையதளத்தில் வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.