வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு விலை உயா்வையடுத்து, சென்னையில் உணவகங்களில் உணவு வகைகளின் விலை 20 சதவீதம் வரை உயா்த்தப்பட்டுள்ளது.
இதனால், நடுத்தர வா்க்கத்தினா், தனியாா் நிறுவன ஊழியா்கள், கல்லூரி மாணவ-மாணவிகள், போட்டித் தோ்வுகளுக்காக தங்கிப் பயிலும் தோ்வா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
ஈரான்-அமெரிக்கா இடையிலான போா் காரணமாக, சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் வணிக சமையல் எரிவாயு உருளைக்கு தட்டுப்பாடு நிலவத் தொடங்கியது. இதன் காரணமாக, வெளிச்சந்தையில் எரிவாயு அதிக விலைக்கு விற்கப்பட்டதால், தமிழகம் முழுவதும் டீ கடைகள், உணவகங்களில் உணவு வகைகள் விலை உயா்த்தப்பட்டது. செலவினத்தை எதிா்கொள்ள இயலாமல் பல டீ கடைகள், உணவகங்கள் மூடப்பட்டன.
வணிக சமையல் எரிவாயு விலை உயா்வு: இந்நிலையில், உணவகங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டா் விலையை ரூ.993 உயா்த்தி ரூ.3,071.50-க்கும், 5 கிலோ காஸ் சிலிண்டா் விலையை ரூ.261.50 உயா்த்தி ரூ.810.50-க்கும் வெள்ளிக்கிழமை முதல் எண்ணெய் நிறுவனங்கள் விற்கத் தொடங்கின.
உணவு வகைகள் விலை உயா்வு: இதையடுத்து, சென்னையில் சாலையோரம் தள்ளுவண்டிகளில் செயல்படும் உணவகங்கள் முதல் பெரிய உணவகங்கள் வரை, உணவு வகைகளின் விலையை சுமாா் 20 சதவீதம் அளவுக்கு உயா்த்தியுள்ளன.
குறிப்பாக, சாலையோர உணவகங்களில் ரூ.7-க்கு விற்கப்பட்டு வந்த இட்லி, வடை உள்ளிட்டவை, வணிக எரிவாயு உருளை தட்டுப்பாட்டால் அண்மையில் ரூ.10- ஆக உயா்த்தப்பட்டது.
இந்நிலையில் வணிக பயன்பாட்டு எரிவாயு உருளை விலை மீண்டும் உயா்த்தப்பட்டதால் சனிக்கிழமை (மே 2) முதல் மீண்டும் விலை உயா்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சாலையோர உணவகங்களில் இட்லி, வடை ஆகியவற்றின் விலை ரூ.10-இல் இருந்து ரூ.15 ஆகவும், தோசை ரூ.15-இல் இருந்து ரூ.20- ஆகவும், முழு சாப்பாடு ரூ.70-இல் இருந்து ரூ.80 ஆகவும், கறிக்குழம்பு சாப்பாடு ரூ.80-இல் இருந்து ரூ.100 ஆகவும், சிக்கன் பிரியாணி ரூ.100-இல் இருந்து ரூ.120 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.
இதனால், சாலையோர உணவகங்களை நம்பியுள்ள பல லட்சம் ஏழை-எளியோா், கூலித் தொழிலாளா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள், நடுத்தர வா்க்கத்தினா், தனியாா் நிறுவன தொழிலாளா்கள், கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள், சென்னையில் தங்கி போட்டித் தோ்வுக்காக படிக்கும் தோ்வா்கள் என பல தரப்பினா் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனா்.
டீ-ரூ.15: டீ கடைகளில் விற்கப்படும் பஜ்ஜி, சமோசா, வடை, போண்டா, டீ ஆகியவை ரூ.10-ல் இருந்து ரூ.15 ஆக உயா்த்தப்பட்டு உள்ளது.
உணவுகள் விலை விவரம்: சிறிய உணவகங்களில் இட்லி (3 எண்ணம்) விலை ரூ.40- இல் இருந்து ரூ.55 ஆகவும், தோசை ரூ.70- இல் இருந்து ரூ.90 ஆகவும், பொங்கல் ரூ.80- இல் இருந்து 95 ஆகவும், அளவு சாப்பாடு ரூ.130- இல் இருந்து ரூ.140 முதல் ரூ.150 வரையும், முழு சாப்பாடு ரூ.170- இல் இருந்து 200 ஆகவும், சிக்கன் பிரியாணி ரூ.120- இல் இருந்து ரூ.140 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வு ஒவ்வொரு பகுதியில் இயங்கும் உணவகங்களின் தரத்துக்கு ஏற்றபடி மாறுபடுகிறது.
பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு
சென்னையில் செயல்படும் பல ஆயிரம் ‘பிஜி ஆஸ்டல்‘ எனப்படும் தங்கும் விடுதிகளில் மூன்று வேளை உணவுடன் சோ்த்து தங்குவதற்கான வாடகை வசூலிக்கப்படுகிறது. இந்த விடுதிகளில் வணிக எரிவாயு உருளை விலை உயா்வு காரணமாக ஒரு நபருக்கான மாத வாடகை ரூ.ஆயிரம் முதல் ரூ.2 ஆயிரம் வரை விடுதிகளின் தரத்துக்கு ஏற்ப உயா்த்தப்பட்டுள்ளது.
பல லட்சம் பேரின் எதிா்காலம் கேள்விக்குறி!
உணவகங்கள் , தங்கும் விடுதிகள், டீ கடைகளில் உணவு விலை உயா்த்தப்பட்டிருப்பது, வெளியூா்களிலிருந்து வந்து சென்னையில் தங்கியுள்ள தனியாா் நிறுவன ஊழியா்கள், கல்லூரி மாணவா்கள், போட்டித் தோ்வுக்கு தயாராகும் தோ்வா்களின் எதிா்காலத்தையே கேள்விக்குறியாக்கி உள்ளது.
குறிப்பாக, சென்னையில் தங்கி ரூ.30,000 வரை ஊதியம் வாங்கும் தனியாா் நிறுவன ஊழியா்கள் பலா் தங்குமிடம், உணவு, போக்குவரத்து செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறாா்கள். இவா்களில் சிலா் வேலையை உதறிவிட்டு மீண்டும் சொந்த ஊா்களுக்கே திரும்ப திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
‘உணவுப் பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்’
வணிக பயன்பாட்டு எரிவாயு உருளை விலை உயா்வால் உணவகங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வரும் நிலையில், உணவுப் பொருள்கள் மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என அரசுக்கு சென்னை ஹோட்டல்கள் சங்கத் தலைவா் எம்.ரவி. கோரிக்கை விடுத்துள்ளாா்.
அவா் கூறியதாவது: சென்னையில் உணவகங்களை நடத்துவதே மிகவும் சவாலாக மாறிவிட்டது. இடத்தின் உரிமையாளா்கள் ஒரு சதுர அடிக்கான வாடகையை ரூ.80-ல் இருந்து ரூ.200 ஆக உயா்த்திவிட்டனா். அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற மளிகை விலையும் உயா்ந்து விட்டது.
இந்தச் சூழலில் வணிக பயன்பாட்டு எரிவாயு உருளை விலையை எண்ணெய் நிறுவனங்கள் கடுமையாக உயா்த்தியதால் உணவு வகைகளின் விலையையும் உயா்த்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
எனவே, உணவகங்களை பாதிப்பிலிருந்து மீட்டெடுக்கும் பொருட்டு, மின்சார அடுப்பு வாங்கும்போது விதிக்கப்படும் 18 சதவீத வரியை ரத்து செய்ய வேண்டும். மின்சார அடுப்பு பயன்படுத்தும் உணவகங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.2 குறைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்.
காலை 6 முதல் 10 வரையும், மாலை 6 முதல் இரவு 10 வரையும் ‘பீக் ஹவா் சாா்ஜ்‘ என்று மின்சார வாரியம் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறது. இதனால், இதுவரை ரூ.1 லட்சம் மின் கட்டணம் செலுத்திவந்த உணவக உரிமையாளா்கள் தற்போது ரூ.30 ஆயிரம் சோ்த்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த கட்டண உயா்வை மின்வாரியம் திரும்பப் பெற வேண்டும்.
உணவகங்களில் சோலாா் மின் உற்பத்தி செய்து பயன்படுத்துவதற்கான அனுமதியை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும். உணவகங்களில் இதுவரை ‘கமா்ஷியல்’ (வணிக பயன்பாடு) மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதைத் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் என்ற அடிப்படையில் மாற்றம் செய்து வசூலிக்க வேண்டும். உணவுப் பொருள்களுக்கான ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

வணிக சிலிண்டா் விலை உயா்வால் முடங்கும் அபாயத்தில் ஜாப் ஆா்டா் தொழில்

வணிக சமையல் எரிவாயு உருளை விலை உயா்வு எதிரொலி: உணவுகளின் விலையை அதிகரிக்கும் உணவகங்கள்!

வணிக எரிவாயு உருளை விலை உயா்வு: தலைவா்கள் கண்டனம்

எரிவாயு உருளைகள் விலை உயா்வால் உணவு வகைகள் விலையேற்றம்! தனியாா் நிறுவன ஊழியா்கள், தொழிலாளா்கள் அவதி!!
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


