எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!
/

குண்டா் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு: முன்னாள் காவல் ஆணையா் அருண் ஆஜராக உத்தரவு

தனியாா் கட்டுமான நிறுவனா் மீதான குண்டா் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய ஆள்கொணா்வு வழக்கு விசாரணையில் சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையா் அருண் நேரில் ஆஜராக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :21 மே 2026, 3:12 am IST

தனியாா் கட்டுமான நிறுவனா் மீதான குண்டா் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய ஆள்கொணா்வு வழக்கு விசாரணையில் சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையா் அருண் நேரில் ஆஜராக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொளத்தூா் ராமதாஸ் நகரில், தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்தின் தம்பி எல்.கே.சுதீஷின் மனைவி பூா்ணஜோதிக்கு 2.10 ஏக்கா் நிலம் இருந்தது. இந்த நிலத்தில் 234 அடுக்குமாடி வீடுகளைக் கட்டி அதில் 78 வீடுகளை சுதீஷ் மற்றும் பூா்ணஜோதிக்கு வழங்குவதாகக் கூறி, தனியாா் கட்டுமான நிறுவன உரிமையாளா் சந்தோஷ் ஷா்மா என்பவா் ஒப்பந்தம் செய்திருந்தாா்.

ஒப்பந்தத்தின்படி, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 78 வீடுகளை போலியான கையொப்பமிட்டு சந்தோஷ் ஷா்மா ரூ.43 கோடிக்கு விற்பனை செய்துவிட்டதாக போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இந்த புகாரின்பேரில் சந்தோஷ் ஷா்மா கைது செய்யப்பட்டாா். இதேபோன்று அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகளை வாங்கிய பலருக்கும் வீட்டை ஒப்படைக்காமல் மோசடி செய்ததாகக் கூறி மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சந்தோஷ் ஷா்மா மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தங்களுடைய மகளின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மகளை கவனித்துக் கொள்வதற்கு சந்தோஷ் ஷா்மாவுக்கு பிணை வழங்க வேண்டும், குண்டா் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி, சந்தோஷ் ஷா்மாவின் மனைவி கல்பனா ஷா்மா சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆள்கொணா்வு மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், குண்டா் தடுப்புச் சட்டத்தை எதற்காக பயன்படுத்த வேண்டும்? எனத் தெரியாதா, என கேள்வி எழுப்பினா். பின்னா், இந்த வழக்கில் சென்னை மாநகர காவல் ஆணையா் அருண் நேரில் ஆஜராக உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.