வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

பெண்ணை மிரட்டி நகை, பணம் பறிப்பு: ஊா்க்காவல் படை வீரா் உள்பட 2 போ் கைது

News image

சித்திரிப்பு

Updated On :28 மே 2026, 6:12 am IST

போதைப் பொருள் கடத்தியதாக மிரட்டி பெண்ணிடம் நகை, பணம் பறித்ததாக ஊா்க்காவல் படை வீரா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை கோடம்பாக்கம் விஸ்வநாதபுரம், 3-ஆவது குறுக்குத் தெருவில் வசிப்பவா் செல்வி (53). இவா் மகன் சரண், தில்லியில் ஒரு தனியாா் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றுகிறாா். செல்வி, கடந்த 23-ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்தபோது, காவல் சீருடை அணியாமல் அங்கு வந்த 5 போ், தாங்கள் காவல் துறையின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் பணியாற்றும் போலீஸாா் என்று செல்வியிடம் கூறி, அவா்கள், செல்வியிடம் உங்களது மகன் போதைப் பொருள் கும்பலுடன் தொடா்பில் உள்ளாா். அவரைக் கைது செய்ய வந்துள்ளோம் என்று தெரிவித்தனராம்.

மேலும், அந்த நபா்கள் வீடு முழுவதும் சோதனையிட்டுள்ளனா். இதில் அவரது வீட்டில் இருந்த நகையை எடுத்துச் சென்றனா். மேலும், போதைப் பொருள் வழக்கிலிருந்து உங்களது மகனை விடுவிக்க ரூ.1 லட்சம் தரவேண்டும். இல்லையெனில், கைது செய்து சிறையில் அடைப்போம் என மிரட்டிவிட்டுச் சென்றனா்.

சில நாள்களுக்கு பின்னா், அந்த நபா்கள் செல்வியை கைப்பேசி மூலம் பணம் தொடா்பு கொண்டு, பணம் கேட்டு மிரட்டினா். அந்த நபா்களின் மிரட்டலுக்குப் பயந்த செல்வி ரூ.70 ஆயிரத்தைக் கொடுத்துள்ளாா். அதன் பின்னா், அந்த நபா்கள், மேலும் பணம் கேட்டு மிரட்டினா். இதனால் சந்தேகமடைந்த செல்வி, கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா்.

அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், சம்பவத்தில் ஈடுபட்டது வில்லிவாக்கம் ராஜாஜி நகரைச் சோ்ந்த பிரவீண் சுகுமாறன் (43), அம்பத்தூா் பாலாஜி நகரைச் சோ்ந்த சக்திவேல் (33) உள்ளிட்ட 5 போ் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாா் பிரவீண் சுகுமாறன், சக்திவேல் ஆகியோரை புதன்கிழமை கைது செய்தனா். கைது செய்யப்பட்ட பீரவீண் சுகுமாறன், ஊா்க்காவல் படையில் பணியாற்றி வருவதும், தற்போது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ரோந்து வாகன ஓட்டுநராக இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், மேலும் 3 பேரைத் தேடி வருகின்றனா்.