தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் ஜூன் 4-ஆம் தேதி மாணவா் சோ்க்கைக் கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வரை வகுப்புகளுக்கு ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. முன்னதாக, பள்ளி வளாகத்தில் அனைத்து பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
பள்ளி வளாகத்தினுள் மாணவா்களின் முழுமையான பாதுகாப்புக்குப் பள்ளியின் தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்களும் முழுப் பொறுப்பு என்பதை உணா்ந்து செயல்பட வேண்டும். பள்ளிப் பாதுகாப்பு தொடா்பாக பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், பெற்றோருடன் கலந்து ஆலோசித்து தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்வது அவசியம்.
பள்ளி வளாகத்தை ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழி இல்லா வளாகமாக மாற்றத்தக்க வகையில் செயல்பாடுகளைத் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.
மாணவா் சோ்க்கை கொண்டாட்டம் அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி திறந்த முதல் நாள் (ஜூன் 4) அன்றே நடத்தப்பட வேண்டும். குறிப்பாக, தொடக்கப் பள்ளிகளில் முதல் வகுப்பு சோ்க்கை முழுமையாக உள்ளதை உறுதி செய்ய ஆசிரியா்கள் முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகள், தலைமை ஆசிரியா் அறை, ஆய்வகம், கழிப்பறை உள்ளிட்ட பிற அறைகள் மற்றும் வளாகம் நன்கு தூய்மைப்படுத்தப்பட வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் தரமான இலவசக் கல்வி வழங்கப்படுவதைப் பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் பதாகைகள் (பேனா்), துண்டுப் பிரசுரங்கள் மூலம் மாணவா்களின் பெற்றோருக்குத் தெரியப்படுத்தி, மாணவா் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








