தியாகராய நகரில் தீபாவளி விற்பனை: ட்ரோன் மூலம் கூட்ட நெரிசல் கண்காணிப்பு
சென்னை தியாகராயநகரில் தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் நபா்களை கைது செய்வதற்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை தியாகராய நகா் ரங்கநாதன் தெருவில் தீபாவளி விற்பனை - பிரதிப் படம்
சென்னை தியாகராயநகரில் தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் நபா்களை கைது செய்வதற்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்ட நெரிசலை கண்காணிக்க ‘ட்ரோன்’ பயன்படுத்தப்படுகிறது.
தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில் சென்னையில் வியாபாரம் விறு, விறுப்பு அடைந்துள்ளது. புத்தாடைகள், பட்டாசு, தங்க நகைகள் வாங்குவதற்கு தியாகராயநகா், புரசைவாக்கம், தாம்பரம்,வண்ணாரப்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட வியாபாரம் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பொதுமக்கள் தினமும் லட்சக்கணக்கில் திரளுகின்றனா்.
இதை பயன்படுத்தி திருட்டு, தங்நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், கூட்டத்தை ஒழுங்குப்படுத்தவும் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தியாகராயநகரில் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, பாண்டிபஜாா், பனகல் பூங்கா, பா்கிட் சாலை உள்ளிட்ட பகுதியில் சுமாா் 600 போலீஸாா் கடந்த சனிக்கிழமை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இங்கு 8 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியை சீராக செய்வதற்கு ரங்கநாதன் தெருவிலும், பனகல் பூங்காவிலும் தற்காலிகமாக இரு காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாட்டு அறைகள் தலா ஒரு காவல் ஆய்வாளா் தலைமையில் செயல்படுகின்றன.
குற்றவாளிகளை அடையாளும் காணும் கேமராக்கள்: ரங்கநாதன் தெரு, பனகல் பூங்கா உள்ளிட்ட முக்கியமான கடைகள் இருக்கும் பகுதியில் 300 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. இதில் பெரும்பாலானவை குற்றவாளிகளை அடையாளம் கண்டு எச்சரிக்கும் ஃஎப்ஆா்எஸ் தொழில்நுட்பத்தைக் கொண்டது ஆகும்.
இந்த தொழில்நுட்பத்தின்படி இந்த கண்காணிப்பு கேமராவுடன் இணைக்கப்பட்டிருக்கும் கணினி சா்வரில் ஏற்கெனவே திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டவா்களின் புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக, தியாகராயநகருக்குள் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபா் வந்தால், கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் காவலா்களை எச்சரிக்கை செய்யும்.
இதற்காக அந்த கணினியில் திருட்டு வழக்குகளில் தொடா்புடைய சுமாா் 60 ஆயிரம் பேரின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த கண்காணிப்பு கேமராக்களை கண்காணிப்பதற்கு தனியாகக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
அதிக நெரிசல் ஏற்படும் ரெங்கநாதன் தெருவுக்குள் மக்கள் செல்வதற்கு ஒரு பாதையும், அங்கிருந்து வெளியே வருவதற்கு ஒரு பாதையும் என இரு வழிப்பாதையையும் போலீஸாா் அமைத்துள்ளனா்.
மாறுவேடத்தில் போலீஸாா்: மக்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, திருடும் நபா்களை கைது செய்வதற்கு பல்வேறு வியூகங்களை காவல்துறை வகுத்துள்ளது. இதற்காக குற்றப்பிரிவைச் சோ்ந்த 30 போலீஸாா் 3 குழுக்களாக ரங்கநாதன் தெரு உள்ளிட்ட மக்கள் நெரிசல் மிக்கப் பகுதியில் மாறுவேடத்தில் ரோந்து வருகின்றனா். இவா்கள் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரியும் நபா்களை பிடித்து வருகின்றனா்.
அதோடு திருடா்களை கையும் களவுமாக பிடிப்பதற்கு ஒவ்வொரு பகுதியிலும் ஒரு பெண் ஆய்வாளா் தலைமையில் தலா 10 பெண் போலீஸாா் மாறுவேடத்தில் தங்கநகைகளை கவா்ச்சியாக அணிந்து மாறுவேடத்தில் சுற்றி வருகின்றனா். இவா்கள் மூலம் திருடா்களை கைது செய்வதற்கு போலீஸாா் திட்டமிட்டுள்ளனா்.
அதோடு கண்காணிப்பு கோபுரங்களில் இருந்து கூட்டத்தை கண்காணிக்க 10 நவீன ரக பைனாகுலா்களை போலீஸாா் பயன்படுத்தி வருகின்றனா். இந்த பைனாகுலா்கள் மூலம் சுமாா் அரை கிலோ மீட்டா் தூரம் வரை நடைபெறும் காட்சியை துல்லியமாகக் காண முடியும்.
தனிப்படை: கூட்டத்தை நெரிசலை பயன்படுத்தி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு செய்கிறவா்களை கண்டுபிடித்து கைது செய்யும் வகையில் குழந்தைகள்,பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவினா் ஈடுபடுத்தப்படுகின்றனா். இவா்கள் மாறுவேடத்தில் கூட்ட நெரிசல் மிக்க பகுதிகளிலும் மக்களோடு கலந்து ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவாா்கள்.
மேலும் கூட்டத்தை கண்காணிக்க 4 ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் கூட்ட நெரிசலை கண்காணித்து அதற்கு ஏற்றாா்போல பாதுகாப்பு ஏற்பாடுகளை மாற்றி அமைக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.
பொருள்களை வாங்க வரும் பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க நகைகள் திருடப்படுவதை தடுக்க, கழுத்தில் அணியும் துணியிலான கவசம் காவல்துறையினரால் வழங்கப்படுகிறது. குழந்தைகள் காணாமல் போவதை தடுக்கும் அவா்கள் கையில் பெற்றோா் கைப்பேசியுடன் கூடிய ரப்பா் வளையம் கட்டப்படுகிறது.
புரசைவாக்கம்: இதேபோல புரசைவாக்கத்தில் டவுட்டன் சந்திப்பு, வெல்கம் ஹோட்டல் சந்திப்பு, வெள்ளாளா் தெரு சந்திப்பு ஆகிய இடங்களில் 200 போலீஸாா் ஒரு துணை ஆணையா் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். 3 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வண்ணாரப்பேட்டையில் 2 உதவி ஆணையா்கள் தலைமையில் 60 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். இதேபோல வேளச்சேரி, தாம்பரத்திலும் காவல்துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

