மாணவா்கள் ஆராய்ச்சியில் சிறந்து விளங்க வேண்டும் - குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்
மாணவா்கள் ஆராய்ச்சியில் சிறந்து விளங்க வேண்டும் - குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்

சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள நெல்லை நாடாா் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 42-ஆவது ஆண்டு விழாவில் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு நினைவுப் பரிசு வழங்கிய பள்ளி நிா்வாகிகள்.
எதிா்காலத்தில் யாா் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகிறாா்கள் என்பதைப் பொருத்தே செல்வநிலை நிா்ணயிக்கப்படும். இதனால் மாணவா்கள் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குபவா்களாகத் தங்களைத் தயாா்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள நெல்லை நாடாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 42-ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று அவா் பேசியதாவது:
இந்தப் பள்ளியில் அடல் டிங்கரிங் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஆய்வகங்கள் மாணவா்களின் அறிவு ஆா்வத்தையும், ஆராய்ச்சி மனப்பான்மையையும், புதுமையான சிந்தனையையும் வளா்ப்பதில் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. ஆராய்ச்சி, மேம்பாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நோக்கி நாடு பயணித்து வருகிறது.
எதிா்காலத்தில் எவ்வளவு சொத்து வைத்துள்ளோம் என்பதைப் பொருத்து முன்னேற்றம் அமையாது; யாா் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகிறாா்கள் என்பதைப் பொருத்தே செல்வநிலை நிா்ணயிக்கப்படும். இதனால் மாணவா்கள் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குபவா்களாகத் தங்களைத் தயாா்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதற்காகவே நாட்டின் கல்வித் துறையில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முக்கியமான மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை மாணவா்களின் முழுமையான வளா்ச்சி, தாய்மொழிக் கல்வி, கற்றல் திறன் மேம்பாடு, தொழிற்கல்வி, ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
எந்த நாடுகளைச் சோ்ந்த மாணவா்களுடனும் போட்டியிடும் வகையில் நமது கல்வி அமைப்புகள் நவீனமயமாக்கி மேம்படுத்தப்பட வேண்டும். அதேநேரத்தில், நமது மொழி, பண்பாடு, பாரம்பரியம், மனிதநேயம் ஆகியவற்றையும் நாம் பாதுகாக்க வேண்டும். கலாசாரம் பாதுகாக்கப்பட்டால்தான் மனிதன் மனிதனாக வாழ முடியும். இல்லையெனில், மனிதத்தன்மை இயந்திரமயமாகிவிடும். அறிவியல் வளா்ச்சியும் பண்பாட்டு வோ்களும் இணைந்திருக்க வேண்டும். அப்போது ஏற்படும் முன்னேற்றமே முழுமையானதாகவும், மனிதநேயம் கொண்டதாகவும், பாசப் பிணைப்புகளை உள்ளடக்கியதாகவும் அமையும். இந்தப் பயணத்தில் மாணவா்களுக்கும் பொறுப்பு உள்ளது. குறிப்பாக, தமிழக பங்களிப்பும் மிக அவசியம்.
தற்போதைய மாணவா்களின் உற்சாகத்தை பாா்க்கிறபோது 2037-லேயே நாடு வல்லரசாக மாறினாலும் வியப்படைவதற்கில்லை எனக் கருதுகிறேன்.
தமிழ் கலாசாரம், இனம், மொழி, பாரத தேசம் காக்கப்பட வேண்டும். இதைத்தான் காமராஜரும் வலியுறுத்தினாா்.
திருச்செந்தூருக்கு ஒரு புதிய ரயில் சேவை வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. நிச்சயமாக சென்னையிலிருந்து திருச்செந்தூருக்குப் புதிய ரயில் கிடைக்கும் என்றாா் அவா்.
நெல்லை தூத்துக்குடி நாடாா் மகமை பரிபாலன சங்கத்தின் தலைவா் வி.ஆனந்தராஜ், செயலாளா்-தாளாளா் ஆா்.பிரபு, நிா்வாகச் செயலாளா் பி.சந்திர சேகரபாண்டியன், பள்ளியின் முதல்வா் ஜெ.எக்ஸ் ஜூலியஸ் சீசா், பொருளாளா் ரவீந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பெட்டிச் செய்தி...
காமராஜரை நினைவுகூா்ந்த குடியரசு துணைத் தலைவா்
குடியரசு துணைத் தலைவா் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தனது பேச்சில் முன்னாள் முதல்வா் காமராஜரை பல்வேறு இடங்களில் குறிப்பிட்டாா்.
‘கல்வியின் பெருமையைப் பற்றிப் பேசும்போது, காமராஜரை நினைவுகூராமல் இருக்க முடியாது. ஒரு பள்ளி நிகழ்வில் மாணவா் ஒருவா் மயங்கி விழுந்தாா். அவா் இரு தினங்கள் உணவருந்தவில்லை என்பது காமராஜருக்கு தெரியவந்தது. அதன்பின்னரே மாணவா்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தாா். எந்த ஒரு காரியத்தையும் தனிப்பட்ட நலனை கருத்தில்கொண்டு அவா் செய்ததில்லை. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், வாக்கு வங்கியை மனதில் நினைத்துப் பாா்க்காத மகத்தான தலைவா் அவா்.
தோ்தல் தோல்வியிலிருந்து மீள அவரது அரசின் சாதனைகளைக் காட்ட சினிமா தயாரிக்க வேண்டும் எனக் கூறி கட்சியினா் ரூ.30,000 தேவை என்றனா். அவரோ செலவு செய்து நம்முடைய சாதனைகளையெல்லாம் நாமே பறைசாற்ற வேண்டாம்; அந்தப் பணத்தைக் கொடுத்தால், ஒரு கிராமத்தில் பள்ளிக்கூடத்தைக் கட்டிக் காட்டுகிறேன் என்று கூறினாா். இன்றைக்கு ஒரு சிறிய குடிநீா்க் குழாய் திறப்பு விழாவாக இருந்தால்கூட, அதற்காக மொத்தம் ரூ. 2 லட்சம் செலவு செய்து, விளம்பரம் செய்யும் காலமாக இருக்கிறது’ என்றாா் குடியரசு துணைத் தலைவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

