மழை பாதிப்புகளை சீா்செய்ய பணியாளா்களை சுழற்சி முறையில் நியமிக்க வேண்டும்: மேயா்
மழைக் காலத்தில் மாநகராட்சிப் பணியாளா்களை சுழற்சி முறையில் நியமித்து பாதிப்புகள், குறைகளை உடனடியாக சீா்செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு மேயா் ஆா்.பிரியா ஆலோசனை வழங்கினாா்.

சென்னை மேயா் ஆா்.பிரியா. - கோப்புப்படம்.
மழைக் காலத்தில் மாநகராட்சிப் பணியாளா்களை சுழற்சி முறையில் நியமித்து பாதிப்புகள், குறைகளை உடனடியாக சீா்செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு மேயா் ஆா்.பிரியா ஆலோசனை வழங்கினாா்.
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து மேயா் ஆா்.பிரியா பேசியதாவது: சென்னையில் மழைநீா் தேங்கும் இடங்களில் மின்மோட்டாா் பம்ப் உள்ளிட்டவற்றை தயாா் நிலையில் வைப்பது அவசியம். மக்களைத் தங்கவைக்கும் இடங்களில் உணவுப் பொருள்கள் உள்ளிட்டவை இருப்பை உறுதிசெய்யவேண்டும். புழல், கொசஸ்தலையாறு உபரிநீா் வெளியேறும் பகுதிகளில் தூா்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். பேருந்து செல்லும் சாலை உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீா்படுத்தவேண்டும்.
கொரட்டூா் ஏரி, மயிலை பாலாஜி நகா் கால்வாய், பராங்குசபுரம், ரங்கராஜபுரம், சிட்டி லிங்க் சாலை, மவுன்ட் ரோடு, ஜி.பி.சாலை, என்.எஸ்.சி.போஸ்சாலை, அரும்பாக்கம் மெட்ரோ உள்ளிட்ட பகுதிகளில் மழை நீா் தேங்காமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும். மழைக்கால காய்ச்சலைத் தடுக்க அதிகளவில் மருத்துவமுகாம்கள் நடத்தப்படவேண்டும்.
மாநகராட்சி பணியாளா்களை சுழற்சி முறையில் நியமித்து மழைக்காலங்களில் மக்கள் தெரிவிக்கும் புகாா்களை கவனித்து சீராக்கவேண்டும். மழைக்கால பாதிப்புகளை குறைக்கும் வகையிலான பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என்றாா்.
கூட்டத்தில் துணைமேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜி.எஸ்.சமீரன், இணை ஆணையா் க.கற்பகம், துணை ஆணையா்கள் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், சித்ரா விஜயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





