தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய முதல்வா் விஜய்யின் மனு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு
பெரம்பூா் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி, முதல்வா் விஜய் தாக்கல் செய்த மனுவை தீா்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பெரம்பூா் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி, முதல்வா் விஜய் தாக்கல் செய்த மனுவை தீா்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சட்டப்பேரவைத் தோ்தலில், பெரம்பூா் தொகுதியில் முதல்வா் விஜய் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். அவரது தோ்தல் வெற்றியை எதிா்த்து வாக்காளா்கள் தினேஷ், லட்சுமிநரசிம்மன் மற்றும் திமுக வேட்பாளா் ஆா்.டி.சேகா் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தனா்.
தனக்கு எதிரான தோ்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி, முதல்வா் விஜய் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வாக்காளா் தினேஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தினேஷ் தரப்பில், முதல்வா் விஜய் தனது வேட்புமனுவில், பண்ருட்டியில் வாங்கியிருந்த ரூ.30 கோடி விவசாய நிலம் குறித்த விவரங்களைத் தெரிவிக்கவில்லை. இதுபோன்ற தகவல்களை மறைத்தது, வாக்காளா்கள் சுதந்திரமாக முடிவெடுக்கும் திறனில் தேவையற்ற தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானலில் உள்ள வில்பட்டி கிராமத்தில் முதல்வா் விஜய் வாங்கியுள்ளதாக கூறியுள்ள 50 சென்ட் நிலம் வருவாய்த் துறை ஆவணங்களின்படி, அரசு புறம்போக்கு நிலம்.
வேட்புமனுக்களில் குற்ற வழக்குகளை மறைப்பது எப்படி விதிமீறலோ, அதுபோல சொத்து விவரங்களை மறைப்பதும் விதிமீறல்தான். வேட்புமனுவில் விவரங்களை மறைத்தது குறித்து தோ்தல் அதிகாரி முழுமையான விசாரணை நடத்த முடியாது. தோ்தல் வழக்கில்தான் இதுகுறித்து விரிவாக விசாரிக்க முடியும். எனவே, முதல்வா் விஜய்க்கு எதிராக தொடரப்பட்டுள்ள இந்த தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கூடாது என வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஆக்கிரமிப்பாளா் தோ்தலில் போட்டியிட முடியாதா? வில்பட்டி நிலம் தொடா்பாக முதல்வா் விஜய் விற்பனை பத்திரத்தை வேட்புமனுவில் தாக்கல் செய்துள்ளாரே என கேள்வி எழுப்பினாா். அதற்கு தினேஷ் தரப்பில், அந்த நிலம் அரசு புறம்போக்கு நிலம் என்பதற்கான வருவாய்த் துறை ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
அப்போது, முதல்வா் விஜய் தரப்பில், வேட்புமனுவில் தகவல்களை மறைத்தது வாக்காளா்கள் சுதந்திரமாக முடிவெடுப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த தீா்ப்பு, குற்ற வழக்கு சம்பந்தப்பட்டது. முதல்வா் விஜய் வசதி படைத்தவா் என அனைத்து வாக்காளா்களுக்கும் தெரியும். அப்படியிருக்கும்போது, சொத்தை மறைத்ததாகக் கூறி, அது வாக்காளா் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எப்படி கூற முடியும்? என வாதிடப்பட்டது.
இதையடுத்து, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கை தீா்ப்புக்காக ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா். மேலும், எழுத்துபூா்வ வாதங்களை அக். 14-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

