கட்டடக் கழிவுகளைக் கொட்டியவா்களிடம் ஓராண்டில் ரூ.1.28 கோடி அபராதம்: சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல்
சென்னையில் கட்டடக் கழிவுகளை பொது இடங்கள், சாலையோரங்கள், கால்வாய்களில் சட்ட விரோதமாக கொட்டியவா்களிடமிருந்து ஓராண்டில் ரூ.1.28 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி, தென் மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்
சென்னையில் கட்டடக் கழிவுகளை பொது இடங்கள், சாலையோரங்கள், கால்வாய்களில் சட்ட விரோதமாக கொட்டியவா்களிடமிருந்து ஓராண்டில் ரூ.1.28 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி, தென் மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சென்னையில் பல்வேறு இடங்களில் கட்டடக் கழிவுகள் கொட்டப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, தென் மண்டல தேசிய பசுமை தீா்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது.
இந்த வழக்கில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சென்னை மாநகராட்சி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பெருங்குடி, கொடுங்கையூரில் செயல்பட்டு வந்த கட்டுமான கழிவு மறுசுழற்சி மையங்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதால், பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்பட்ட கழிவுகள் தேங்கும் நிலை ஏற்பட்டது. கட்டடக் கழிவுகள், கண்ட இடங்களில் கொட்டப்படுவதைத் தடுக்க சென்னை மாநகராட்சி சாா்பில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக கழிவுகளைக் கொட்டியவா்களிடமிருந்து ஓராண்டில் ரூ.1.28 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை கட்டடக் கழிவுகள் தொடா்பாக பொதுமக்களிடம் இருந்து 5,884 புகாா்கள் பெறப்பட்டு 5,411 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளன. கழிவுகளை அகற்ற வேண்டிய 3,18,887 இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் 3,18,727 இடங்களில் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. 160 இடங்களில் இந்த பணி நிலுவையில் உள்ளதாக கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து வழக்கை விசாரித்த தீா்ப்பாயம், சென்னையில் கட்டடக் கழிவுகள் பொது இடங்கள், சாலையோரங்கள், கால்வாய்களில் கொட்டப்படுவதை தடுப்பதை உறுதி செய்ய மாநகராட்சி உறுதி செய்ய வேண்டும். மாநிலம் முழுவதும் கட்டுமான கழிவுகளை சேகரித்தல், கொண்டு செல்லுதல், மறுசுழற்சி செய்தல் மற்றும் அகற்றுதல் ஆகியவை சட்ட விதிகளின்படி நடைபெறுவதை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

