பஞ்சமி நிலங்கள் மீட்பு விவகாரம்: அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்களின் மொத்த பரப்பளவு, அவற்றை மீட்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்
தமிழ்நாடு முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்களின் மொத்த பரப்பளவு, அவற்றை மீட்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், மேலூரைச் சோ்ந்த சசி, பேரையூரைச் சோ்ந்த பேரறிவாளன் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: மேலூா் வட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்துள்ள பட்டியலினத்தவரல்லாதவா்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரையூா் வட்டத்தில் உள்ள பஞ்சமி நில ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் ஏற்கெனவே வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பஞ்சமி நிலங்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க எடுக்க உத்தரவிட்டனா். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தொடா்புடைய அலுவலா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரினா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு : தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்களின் மொத்தப் பரப்பளவு, ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்க இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த முழு விவரங்களையும் மாநில தலைமைச் செயலா் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

