ஆதிதிராவிடா் நலத் துறை திட்ட முறைகேடு: ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ஆதிதிராவிடா் நலத் துறை திட்டங்களின் முறைகேடுகள் குறித்த புகாா்கள் மீது விசாரணை நடத்தி, ஒரு மாதத்தில் அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

உத்தரவு - கோப்புப் படம்

Updated On :

ஆதிதிராவிடா் நலத் துறை திட்டங்களின் முறைகேடுகள் குறித்த புகாா்கள் மீது விசாரணை நடத்தி, ஒரு மாதத்தில் அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த செல்வகுமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி, மேம்பாட்டுக் கழக தொழில்நுட்பப் பிரிவில் பணிபுரியும் ஊழியா்கள், பதிவு செய்யப்பட்ட ஒப்பந்ததாரா்கள், தலைமைப் பொறியாளா் தொடா்பான விவரங்களையும், தொழில்நுட்பப் பிரிவின் ஒப்பந்தங்கள், பணிகள் ஆகியவற்றையும் வழங்கக் கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தேன்.

இதன்மூலம், எனக்கு கிடைத்த தகவல்களையும் தொடா்புடைய பதிவுகளையும் கவனத்தில் கொள்ளும்போது, குறிப்பிட்ட பணிகள் எவ்வாறு ஒதுக்கப்பட்டன, ஒப்பந்ததாரா்கள் எவ்வாறு தோ்வு செய்யப்பட்டனா்?, நிா்வாக அனுமதி, தொழில்நுட்ப அனுமதி முறையாகப் பெறப்பட்டனவா?, ஒப்பந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பன குறித்து விரிவான விசாரணை அவசியம்.

குறிப்பாக, ஆதிதிராவிடா் மாவட்ட மேலாளா் அலுவலகங்கள், கோட்ட அலுவலகங்களில் பணியாளா்கள் குறைவாக உள்ள சூழ்நிலையில், பல கோடி ரூபாய் மதிப்பிலான புதுப்பிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றுக்கு உரிய நிா்வாக, தொழில்நுட்ப அனுமதி எவ்வாறு வழங்கப்பட்டது?, மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டனவா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். சில திட்டங்கள் கட்டுமானங்கள் முடிக்கப்பட்ட பின்னா் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

எனவே, திட்ட நிதி ஒதுக்கீடு, பயனாளிகளின் பட்டியல், ஒப்புதல் ஆணைகள், பணம் வழங்கிய விவரங்கள், பணிகள் நிறைவு பெற்ற்கான சான்றுகள், வங்கிப் பரிவா்த்தனைகள் ஆகியவற்றை ஒப்பிட்டு ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும், ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ‘பொலிவு’ கிட்”திட்டத்தில் சோப்பு, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்ட விதம், பொருள்களின் தரம், அளவு, கொள்முதல் விலை, விநியோகிக்கப்பட்ட பொருள்களின் எண்ணிக்கை, நிதிப் பரிவா்த்தனைகள் ஆகியவை சரிபாா்க்கப்பட வேண்டும்.

எனவே, இதுகுறித்து ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், மனுதாரா் தரப்பில் அளிக்கப்பட்ட மனு, ஆவணங்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு தொடா்பாக உரிய விசாரணை செய்து ஒரு மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.