அக்வான் புயல்! ஒடிசாவில் 1.2 லட்சம் பேர் வெளியேற்றம்; 69 ரயில்கள் ரத்து!

அக்வான் புயல் நாளை கரையைக் கடக்கவுள்ள நிலையில், ஒடிசாவில் 1.2 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளது குறித்து...

Cyclone 'Akwan

அக்வான் புயல் நாளை கரையைக் கடக்கவுள்ள நிலையில், ஒடிசாவில் 1.2 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்... - PTI

Updated On :

அக்வான் புயல் வரும் வெள்ளிக்கிழமை (நவ. 19) கரையைக் கடக்கவுள்ள நிலையில், ஒடிசாவில் 1.20 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள “அக்வான்” தீவிரப் புயல், வரும் வெள்ளிக்கிழமை மதியம் ஆந்திரப் பிரதேசத்தின் வடக்கு மாவட்டங்கள் மற்றும் ஒடிசாவின் தெற்கு மாவட்டங்களை ஒட்டி கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்தப் புயலானது, ஆந்திரத்தில் கரையைக் கடக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், திடீரென திசை மாறியுள்ளது. பெரும்பாலும் ஒடிசாவின் கோபால்பூர் அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து, ஒடிசா அரசின் சார்பில் 9,299 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டதுடன், மாநில பேரிடர் மீட்புப் படையின் 60 குழுக்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 14 குழுக்களும் தயார்நிலையில் களமிறக்கப்பட்டுள்ளன.

இதில், கஞ்சம் மாவட்டத்தில் 45,364 பேரும், கஜபதி மாவட்டத்தில் சுமார் 18,000 பேரும் என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1.20 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், 5 மாவட்டங்களின் 941 இடங்கள் நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன.

இதையடுத்து, மணிக்கு 90 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்றுடன் அக்வான் புயல் கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்படுகிறது. இதனால், ஒடிசாவில் கிழக்கு ரயில்வேவின் 41 ரயிகளும், தென்கிழக்கு ரயில்வேவின் 28 எக்ஸ்பிரஸ் ரயில்களும் வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளன.

இத்துடன், ஆந்திரத்தின் ஸ்ரீகாகுளம் மற்றும் விஜயநகரம் மாவட்டங்களுக்கு மிகக் கனமழைக்கான “ரெட் அலர்ட்” எச்சரிக்கையும், பார்வதிபுரம் மான்யம், அல்லூரி சீதாராமராஜு மற்றும் அனகப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான “ஆரஞ்ச் அலர்ட்” எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

With Cyclone 'Akwan' set to make landfall this coming Friday 1.20 lakh people in Odisha have been evacuated.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.