உடல்நலம் குன்றியிருந்த சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு உயிரிழந்த நிலையில், அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகள் ஏற்கெனவே காலியாக இருக்கும் நிலையில், தற்போது கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ் பாபு உயிரிழந்த நிலையில், காலியான தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக, தமிழ்நாட்டில் தாராபுரம், மதுராந்தகம், திருச்சி கிழக்கு உள்ளிட்ட ஏழு தொகுதிகள் காலியாக இருந்தன. தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கு மட்டும் கடந்த அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இரண்டு தொகுதிகளிலும், அதிமுகவிலிருந்து வெளியேறி, தவெகவில் இணைந்த சத்தியபாமா, மரகதம் குமரவேல் ஆகியோர் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏக்களாக பதவியேற்றனர்.
கடந்த பேரவைத் தேர்தலில் முதல்வர் ஜோசப் விஜய் போட்டியிட்டு வென்ற திருச்சி கிழக்கிலும், அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற நான்கு எம்எல்ஏக்களும் பதவிகளை ராஜிநாமா செய்ததால், பெருந்துறை, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளும் காலியாக உள்ளன.
இவற்றில், தேர்தல் வழக்குகளின் நிலைமையைப் பொருத்து இந்த தொகுதிகளுக்கும், தற்போது காலியான கொளத்தூர் தொகுதிக்கும் எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை, கொளத்தூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீண்டும் அங்கு போட்டியிடுவாரா? என்பதே தற்போது முக்கிய கேள்வி.
காரணம், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்தது மட்டுமல்ல, மு.க. ஸ்டாலின் ஆதரவாளராக திமுகவில் பணியாற்றி, அங்கிருந்து அதிமுகவில் சேர்ந்து பிறகு அங்கிருந்தும் வெளியேறி தவெகவில் இணைந்த வி.எஸ். பாபுவிடம் தோல்வியடைந்தார்.
இரண்டு முறை வென்ற கொளத்தூர் தொகுதியில், மு.க. ஸ்டாலின் நின்றால் தோல்வியடைவார் என்று, தேர்தலுக்கு முன்பே சில தகவல்கள் கசிந்ததாகவும், அதுபற்றித் தானே நேரடியாக எச்சரித்ததாகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியிருந்தார்.
அந்த அளவுக்கு கொளத்தூரில் கள நிலவரம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக இருப்பதாகவே கூறப்பட்டாலும், தன்னுடைய சொந்தத் தொகுதியிலிருந்து மாறி போட்டியிட மு.க. ஸ்டாலின் விரும்பவில்லை. தான் வெற்றி பெற்றுவிடுவோம் என்றே கருதினார், நம்பினார். ஆனால், பேரவை முடிவுகள் வேறாக இருந்தன. முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வி.எஸ். பாபு, தவெக எம்எல்ஏவானார்.
அப்போதும் மனம் தளராத மு.க. ஸ்டாலின், உடனடியாக, கொளத்தூர் தொகுதியில் சாலைவலம் வந்து தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள்கூட, தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும்முன்னே, தோல்வியடைந்தாலும், தனக்கு வாக்களித்த வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து, தொகுதி மக்களை நெகிழ்ச்சியடைய வைத்திருந்தார் மு.க. ஸ்டாலின்.
திமுக ஆட்சியில் கொளத்தூர் தொகுதியில், பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகளும், பூங்காக்கள், அரசுப் பள்ளிக் கட்டடங்கள், சமுதாயக் கூடங்கள், அரசு திருமண மண்டபங்கள் என பலவும் மேம்படுத்தப்பட்டிருந்தன. எல்லாவற்றையும் கடந்தே, கொளத்தூர் தொகுதி, திமுகவின் கையைவிட்டு நழுவியது. பேரவைத் தேர்தலில் திமுக தோல்வியைச் சந்தித்ததைவிடவும், கொளத்தூர் தொகுதி தோல்வியே அதிகம் பேசப்பட்டது.
ஏற்கனவே, தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல்களில், ஆதிக்கம் பெற்ற அதிமுகவும், இதுவரை கண்டும் காணாமல் இருந்த திமுகவும் அதிக முக்கியத்துவம் கொடுத்து பிரசாரங்கள் செய்து, தாராபுரத்தில் தவெக எம்எல்ஏ சத்யபாமாவுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்ததாகக் கூறப்பட்ட நிலையிலும்கூட, இரு தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்களே வெற்றிபெற்றிருந்தனர்.
இதற்கிடையே, தேர்தலில் தோல்வியடைந்தபோது நிச்சயம் வருத்தம் அடைந்திருந்தாலும், பிறகு வந்த நாள்களில் சட்டப்பேரவையில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்த பிறகு, வருத்தம் சற்று மறைந்திருந்ததைப் போலவே திமுகவின் முப்பெரும் விழாவில் பேசிய மு.க. ஸ்டாலின், ரீல்ஸ் வெறிபிடித்த ஆளுங்கட்சியினரால் நூற்றாண்டு புகழ்பெற்ற பேரவைகூட, தன்னுடைய மாண்பை இழந்து நிற்கிறது. நல்லவேளை, கொளத்தூர் மக்களுக்கு நான் நன்றி சொல்கிறேன், தப்பித்தேன், இந்த கொடுமைகளை எல்லாம் நான் நேரில் பார்க்காமல் இருந்ததற்கு கொளத்தூர் தொகுதி மக்களுக்கு கோடானுகோடி நன்றி என்று சொன்னதோடு, தன்னுடைய தலைக்கு மேல் இரு கரங்களையும் கூப்பி கும்பிடு போட்டிருந்தார்.
எனவே, இடைத்தேர்தல் நடைபெறக் கூடிய கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவா, இல்லையா? ஆனால், வெற்றி வாய்ப்பு சாதகமாக இருந்தாலும் நிச்சயம் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட, மு.க. ஸ்டாலின் ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பார் என்றே சந்தேகம் கொள்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
Summary
By-election in Kolathur constituency! Will M.K. Stalin contest?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


