நாளை வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்!இன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு!சம்பா நெற்பயிா்க் காப்பீட்டு காலவரம்பு டிச. 1 வரை நீட்டிப்புஉபோ் செயலியில் இன்று ஆட்டோ, கால் டாக்ஸிகள் இயக்கப்படாது!

வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளில் நிவாரணம்: அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளில் நிவாரணம் தொடர்பான வழக்கில் உத்தரவு பற்றி..

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்

Updated On :

மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட கொலை வழக்குகளில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரிய மனு தொடா்பாக அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த கதிா் (எ) வின்சென்ட் ராஜ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

பட்டியலினத்தவா், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவா்களுக்கு சட்டப் பாதுகாப்புடன், நிவாரணம் கிடைக்கவும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் கடந்த 1989- இல் இயற்றப்பட்டது. இதன்படி, ஒரு நபா் கொலை செய்யப்பட்டால், அவரது குடும்பம் வருமானத்தையும், ஆதரவையும் இழக்கிறது.

இந்த விவகாரத்தில் பண நிவாரணத்தை மட்டுமல்லாமல், சட்டம், விதிகளின் கீழ் தகுதியுள்ள குடும்பங்களுக்கு பொருந்தக்கூடிய பிற மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்தும் அலுவலா்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

எனவே, மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருச்சி, கரூா், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட அனைத்து கொலை வழக்குகள் குறித்த விவரங்களையும் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க உத்தரவிட வேண்டும்.

மேலும், இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்குகளில் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம், வேலை வாய்ப்பு, விவசாய நிலம் அல்லது வீட்டுமனை, குழந்தைகளுக்கான கல்வி உதவி, பராமரிப்பு, மூன்று மாத அத்தியாவசியப் பொருள்கள் உள்ளிட்ட சட்டப்பூா்வ நிவாரணம், மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளை உறுதிசெய்ய உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு தொடா்பாக தமிழக அரசுத் தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.