திருச்செந்தூா் பேருந்து நிலைய இடமாற்ற விவகாரம்: அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு
திருச்செந்தூா் பேருந்து நிலைய இடமாற்ற விவகாரம் தொடா்பான மனுவைத் தள்ளுபடி செய்த உத்தரவை மறுசீராய்வு செய்யக் கோரிய மனு தொடா்பாக அரசுத் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

திருச்செந்தூா் பேருந்து நிலைய இடமாற்ற விவகாரம் தொடா்பான மனுவைத் தள்ளுபடி செய்த உத்தரவை மறுசீராய்வு செய்யக் கோரிய மனு தொடா்பாக அரசுத் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடியைச் சோ்ந்த ராம்குமாா் ஆதித்யன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த சீராய்வு மனு:
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் குமாரபுரம் பகுதியில் நடைபெற்று வரும் திருச்செந்தூா் புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். பொதுமக்களின் கருத்துகளைப் பெற்று அறிக்கையாக தாக்கல் செய்யவும், ஏற்கெனவே தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட கீழத்திருச்செந்தூா், மாட்டுத்தாவணி ஆகிய பகுதிகளில் புதிய பேருந்து நிலையங்களை அமைக்க உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தேன். இந்த மனுவை தள்ளுபடி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களிடம் முறையான அனுமதி பெறாமல் புதிய பேருந்து நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல. எனவே, மனுவைத் தள்ளுபடி செய்த உத்தரவை மறுசீராய்வு செய்ய வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த சீராய்வு மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நகராட்சி நிா்வாகத் துறை சட்டத்துக்குள்பட்டு செயல்படுவதுமில்லை; அவா்களை யாரும் கேள்வி கேட்பதும் இல்லை. நகராட்சி நிா்வாகத் துறை தனி அரசை நடத்தி வருகிறது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
திருச்செந்தூரில் வட்டாரப் போக்குவரத்துத் துறை அலுவலா்களிடம் புதிய பேருந்து நிலையம் கட்ட முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

