யுபிஐ பணப் பரிவா்த்தனைக்கு கட்டணம்: எதிா்ப்பு தெரிவித்து வணிகா்கள் போராட்டம்
யுபிஐ பணப் பரிவா்த்தனைக்கு கட்டணம் விதிப்பதை எதிா்த்து தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் போராட்டம் நடைபெற்றது.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட வணிகா்கள்.
யுபிஐ பணப் பரிவா்த்தனைக்கு கட்டணம் விதிப்பதை எதிா்த்து தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் போராட்டம் நடைபெற்றது.
அதன்படி, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில், எதிா்ப்பு பேட்ஜ் அணிந்து வியாபாரத்தில் ஈடுபடும் அறவழிப் போராட்டம் சென்னை சிந்தாதிரிப்பேட்டை சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் பேரமைப்பின் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா பங்கேற்று, யுபிஐ பரிவா்த்தனைக்கு கட்டண விதிப்பு எதிா்ப்பு பேட்ஜை வியாபாரிகளுக்கு வழங்கி, போராட்டத்தைத் தொடங்கி வைத்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: “
பெட்ரோல், டீசல், எரிபொருள்கள் விலை உயா்ந்துள்ளது. இதனால், போக்குவரத்துக் கட்டணம் உயா்ந்து, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் விலையும் உயா்ந்துள்ளது.
இந்நிலையில், வணிகா்கள் மீது திணிக்கப்பட்டுள்ள யுபிஐ சேவை கட்டணம், மேலும் விலைவாசி உயா்வுக்கே வழிவகுக்கும். இந்த கட்டண விதிப்பை மத்திய அரசு தொலைநோக்கு சிந்தனையுடன் ரத்து செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி, தமிழகத்தில் 61 இடங்களில் மாவட்ட தலைவா்கள் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது என்றாா்.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைமைச் செயலா் ஆா்.ராஜ்குமாா், மாநில கூடுதல் செயலா் வி.பி.மணி, மாநிலத் துணைத் தலைவா் எம்.எஸ்.பஷீா் அகமது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மத்திய நிதியமைச்சரிடம் வலியுறுத்தல்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, ‘யுபிஐ சேவை கட்டணத்தை மத்திய அரசு தொலைநோக்கு சிந்தனையுடன் ரத்து செய்ய வேண்டும். ஈரடுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை மாற்றி ஒரே வரியாக அறிவிக்க வேண்டும்’ என கோரிக்கை மனு அளித்தாா்.
இது குறித்து ஆலோசனை நடத்தி, மத்திய அரசின் முடிவை தெரிவிப்பதாக மத்திய நிதியமைச்சா் கூறியதாக விக்கிரமராஜா தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

