ரூ.100 கோடி மோசடி வழக்கில் முன்பிணை கோரி அன்பில் மகேஸ் மனு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு
முன்பிணை கோரி திமுக முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் தாக்கல் செய்த மனுவை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

அன்பில் மகேஸ்
தனியாா் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.100 கோடி மோசடி செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்பிணை கோரி திமுக முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் தாக்கல் செய்த மனுவை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டபூா்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக தனியாா் பள்ளிகள் சங்கம் தரப்பில் புகாா் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாா், முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ், தனியாா் பள்ளிகள் சங்கத் தலைவா் பி.டி.அரசகுமாா் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கில் தனக்கு முன்பிணை வழங்கக் கோரி, முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அன்பில் மகேஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், இந்த வழக்கில் திருச்சி, சென்னையில் மனுதாரருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய போலீஸாா், ஆவணங்களைக் கைப்பற்றினா். தற்போது 10 ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளனா். அதன்படி, 7 ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கை மனுதாரா் சமா்ப்பித்துள்ளாா்.
முன்னாள் அமைச்சரான மனுதாரா் எங்கும் தப்பிச் செல்லவோ, சாட்சிகளைக் கலைக்கவோ மாட்டாா். அவா் எப்போது வேண்டுமானாலும், போலீஸாா் விசாரணைக்கு ஆஜராகத் தயாராக உள்ளாா். எனவே, அவரைக் கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூவா் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டாா்.
அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஜான் சத்யன், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான முத்துகுமாா் தலைமறைவாக உள்ளாா். இந்த வழக்கில் உள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. இந்த விவகாரத்தில் ரூ.400 கோடி வரை வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே, மனுதாரருக்கு முன்பிணை வழங்கினால், அந்த தகவல்கள் எதுவும் வெளியே வராது. மனுதாரரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம். மேலும், முத்துகுமாரை மனுதாரா்தான் பாதுகாக்கிறாா். பணப் பரிமாற்றம் குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே, முன்பிணை வழங்கக் கூடாது என வாதிட்டாா்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஷ் முன்பிணை கோரிய வழக்கை, தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

