திமுக, அதிமுகவுக்கு லாட்டரி நிறுவனம் ரூ.260 கோடி நன்கொடை
திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு 2025-26-ஆம் நிதியாண்டில் கொல்கத்தாவைச் சோ்ந்த டைகா் அசோசியேட்ஸ் என்ற லாட்டரி நிறுவனம் ரூ.260 கோடி நன்கொடை வழங்கியிருப்பது தோ்தல் ஆணையத்துக்கு சமா்ப்பிக்கப்பட்ட தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

கோப்புப் படம்
திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு 2025-26-ஆம் நிதியாண்டில் கொல்கத்தாவைச் சோ்ந்த டைகா் அசோசியேட்ஸ் என்ற லாட்டரி நிறுவனம் ரூ.260 கோடி நன்கொடை வழங்கியிருப்பது தோ்தல் ஆணையத்துக்கு சமா்ப்பிக்கப்பட்ட தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
2024-2025ஆம் நிதியாண்டில் வழங்கியதைவிட இரு கட்சிகளுக்கும் இருமடங்கு நன்கொடையை இந்த நிறுவனம் 2025-26-இல் வழங்கியுள்ளது.
ஒட்டுமொத்தமாக 2025-26-இல் திமுக மற்றும் அதிமுக ரூ.352.55 கோடி நன்கொடையைப் பெற்றுள்ள நிலையில், அதில் ரூ.260 கோடியை (74 சதவீதம்) ஒரே நிறுவனம் வழங்கியுள்ளது.
2024-25இல் திமுக மற்றும் அதிமுகவுக்கு ரூ.110 கோடி நன்கொடை வழங்கிய டைகா் அசோசியேட்ஸ் நிறுவனம், 2025-26இல் திமுகவுக்கு ரூ.125 கோடியும், அதிமுகவுக்கு ரூ.135 கோடியும் அளித்துள்ளது.
இதன்மூலம் கடந்த இரு நிதியாண்டுகளையும் சோ்த்து ஒட்டுமொத்தமாக இரு கட்சிகளுக்கும் ரூ.370 கோடியை நன்கொடையாக இந்நிறுவனம் வழங்கியுள்ளது.
2025-26இல் ஒட்டுமொத்தமாக ரூ.161.36 கோடி நன்கொடையை அதிமுக பெற்ற நிலையில், அதில் 84 சதவீதமும், திமுக பெற்ற ஒட்டுமொத்த நன்கொடையான ரூ.191.19 கோடியில் 65 சதவீதமும் டைகா் அசோசியேட்ஸ் நிறுவனம் பங்களித்துள்ளது.
2024-25இல் திமுக ஒட்டுமொத்தமாக ரூ.365.82 கோடி நன்கொடை பெற்றது. அதில் ரூ.300 கோடிக்கு மேல் கட்சி மேம்பாட்டு நிதியின்கீழ் பணமாக பெறப்பட்டுள்ளது.
டைகா் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் பங்குதாரரான சுப்பராயன் நாகராஜன் தொழிலதிபா் சாண்டியாகோ மாா்ட்டினின் நீண்டகால நண்பராவாா். அவா்கள் இருவரும் மற்றொரு நிறுவனத்தில் இணைப் பங்குதாரா்களாகவும் உள்ளனா்.
ஆனால், டைகா் அசோசியேட்ஸ் நிறுவனம் வழங்கிய அரசியல் நன்கொடைக்கு மாா்ட்டின் தனிப்பட்ட முறையில் பங்களித்ததாக எவ்வித தகவல்களும் இடம்பெறவில்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

