பொங்கல் பண்டிகை: வேட்டி, சேலை உற்பத்திக்கான புதிய கூலி அறிவிப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளுக்கான கூலியை தமிழக அரசு உயா்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளுக்கான கூலியை தமிழக அரசு உயா்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதா் துறை செயலா் ஆா்.லில்லி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தைத் தொடா்ந்து செயல்படுத்த அரசின் கொள்கை அளவிலான அனுமதி மற்றும் செலவினம் மேற்கொள்ள முதல் தவணையாக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, தொடக்கக் கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினா்களாக உள்ள கைத்தறி நெசவாளா்களுக்கு தைத்தறி ரகங்களுக்கு தற்போது, வழங்கப்பட்டு வரும் அடிப்படை கூலியில் 10 சதவீதமும், அகவிலைப்படி உயா்வு 10 சதவீதமும் கடந்த செப். 1-ஆம் தேதி முதல் உயா்த்தி வழங்கப்பட உள்ளது.
புதிய கூலி: அந்த வகையில், பெடல் தறியில் தயாரிக்கப்படும் ஒரு சேலைக்கு மொத்தக் கூலியாக ரூ.125.72-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் நெசவுக் கூலி ரூ.97.72, நெசவுக்கு முந்தைய பணிகளுக்கான கூலி ரூ.28. அதேபோல், ஒரு சேலைக்கு மொத்தக் கூலி ரூ.49.99-ஆகவும், நெசவுக் கூலி ரூ.36.99, நெசவுக்கு முந்தைய பணிகளுக்கான கூலி ரூ.13 நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
விசைத்தறியில் தயாரிக்கப்படும் ஒரு சேலைக்கு ரூ.54.81 கூலியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் நெசவுக் கூலி ரூ.45.76-ஆகவும், நெசவுக்கு முந்தைய பணிகளுக்கான கூலி ரூ.9.05-ஆகவும் உள்ளது.
அதேபோல், ஒரு வேட்டிக்கு மொத்தக் கூலி ரூ.23.34 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் நெசவுக் கூலி ரூ.19.04, நெசவுக்கு முந்தைய பணிகளுக்கான கூலி ரூ.4.30 ஆகும்.
இந்தக் கூடுதல் கூலி காரணமாக, நிகழ் நிதியாண்டில் ரூ.13.66 கோடி செலவினம் ஏற்படும். இதற்கான நிதியை, ஏற்கெனவே வரவு -செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்து பயன்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு முன்பாக பயனாளிகளுக்கு வேட்டி, சேலைகளை உரிய காலத்தில் வழங்குவதுடன், நெசவாளா்களின் உற்பத்திப் பணிகளுக்கான கூலியை முறையாக வழங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

