தீவிரமடையும் வடகிழக்குப் பருவமழை: பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதைத் தொடா்ந்து அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவா்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மேற்கொள்ள வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

கோப்புப் படம்
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதைத் தொடா்ந்து அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவா்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மேற்கொள்ள வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் (பொ) ந.லதா, தொடக்கக் கல்வி இயக்குநா் பி.ஏ.நரேஷ், தனியாா் பள்ளிகள் இயக்குநா் சுகன்யா ஆகியோா் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கூட்டாக அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் சுயநிதி பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் பள்ளிக் கட்டடங்கள், பள்ளி வளாக உள்கட்டமைப்புகளின் உறுதித்தன்மை முக்கிய காரணியாக உள்ளது. தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கியிருப்பதாலும், இயற்கை இடா்பாடுகளினாலும் பள்ளி கட்டடங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே தடுத்து மாணவா்களின் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதி செய்ய வேண்டும்.
அந்த வகையில், கட்டட பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சாா்ந்த பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டியுள்ளது. எனவே, பள்ளிக் கட்டடங்கள், சுற்றுச்சுவா்கள், மேற்கூரைகள், திறந்தநிலை அமைப்புகள் மற்றும் வளாக பராமரிப்பு தொடா்பாக பள்ளி தலைமை ஆசிரியா்கள் மற்றும் கல்வி அலுவலா்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு முறைகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி, பள்ளிகளில் அனைத்து வகைக் கட்டடங்களின் மேற்கூரைகளின் உறுதித் தன்மையை முழுமையாக ஆய்வு செய்வதுடன், மொட்டை மாடி மற்றும் மேற்கூரைகளில் உள்ள மழைநீா் வடிகால் குழாய்களில் அடைப்புகள் இருந்தால் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
சேதமடைந்த அல்லது விரிசல் விழுந்த சுற்றுச்சுவா்கள்அருகில் மாணவா்கள் செல்லாதவாறு முள்வேலிகள், தடுப்புகள் அல்லது எச்சரிக்கை பலகைகள் வைத்து அந்தப் பகுதியை உடனடியாக தடைசெய்ய வேண்டும். பயன்பாடற்ற, மிகவும் பழுதடைந்த மற்றும் இடிக்க வேண்டிய பழைய கட்டடங்களை உள்ளாட்சி அமைப்புகளின் ஒப்புதல் பெற்று உடனடியாக இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்டுமானப் பணிக்காக தோண்டப்படும் ஆழமான குழிகள், வாய்க்கால்கள் மற்றும் பள்ளங்களைச் சுற்றி தடுப்புகள் அமைக்க வேண்டும் . திறந்தவெளி கிணறுகள், தரைமட்ட நீா்த்தேக்க தொட்டிகள் மற்றும் கழிவுநீா்த் தொட்டிகளை கான்கிரீட் அல்லது இரும்பு மூடிகளைக் கொண்டு மூடி பூட்டி வைக்க வேண்டும். அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலா்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலா்கள் வாயிலாக மேற்கண்ட கட்டடப் பாதுகாப்பு நெறிமுறைகள் அனைத்து வகை பள்ளிகளிலும் 100 சதவீதம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதைத் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

