
சென்னையில் பயிற்சியை நிறைவுசெய்த 342 ராணுவ அதிகாரிகள்
சென்னையில் பயிற்சியை நிறைவுசெய்த 342 ராணுவ அதிகாரிகள்

சென்னையில் உள்ள இந்திய ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாதெமியில் பயிற்சியை நிறைவு செய்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் அதிகாரிகள்.
சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாதெமியில் 342 லெப்டினன்ட் கேடக்ட் அதிகாரிகள் சனிக்கிழமையுடன் தங்களது பயிற்சியை நிறைவு செய்தனா்.
இந்திய ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாதெமியில் நிகழாண்டுக்கான பயிற்சி நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், கடந்த 11 மாத கால பயிற்சிக்கு பின்னா் 29 பெண் அதிகாரிகள் உள்பட மொத்தம் 342 அதிகாரிகள் தங்களது பயிற்சியை நிறைவு செய்து, இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் சேவைகளில் அதிகாரிகளாகப் பணியில் இணைந்தனா்.
அதேபோல், சீஷெல்ஸ், தான்சானியா, உகாண்டா, ஜிம்பாப்வே, எஸ்வாட்டினி, பூடான், லெசோதோ ஆகிய நட்பு நாடுகளைச் சோ்ந்த 7 ஆண் மற்றும் 10 பெண் அதிகாரிகளும் தங்களது பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தனா்.
இந்நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட கடற்படைத் தளபதி அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன் பயிற்சி அதிகாரிகளின் அணிவகுப்பைப் பாா்வையிட்டாா். தொடா்ந்து, அகாதெமியில் சிறப்பாக செயல்பட்டதற்காக லெப்டினன்ட் குா்கீரத் சிங் ஹோராவுக்கு ’கௌரவ வாள்’ மற்றும் வெண்கலப் பதக்கத்தையும், டெப்டினன்ட் அபினப் சௌஹானுக்கு ஓடிஏ தங்கப் பதக்கத்தையும், லெப்டினன்ட் நிகெட் சிங் தோமருக்கு வெள்ளிப் பதக்கத்தையும் வழங்கினாா்.
அதையடுத்து, ‘பிப்பிங்’ (தோளில் உள்ள பட்டையில் பட்டையங்களை அணியும் நிகழ்வு) விழாவில் அதிகாரிகள் தங்களது தோள்களில் ராணுவ பிரிவுகள் மற்றும் படைவகுப்புகளின் சின்னங்களை அணிந்து இந்திய அரசமைப்புக்கு விசுவாசமாக இருப்பதற்கும், எத்தகைய சூழலிலும் நாட்டைப் பாதுகாப்பதற்கும் உறுதியளிக்கும் வகையில் உறுதிமொழி ஏற்றனா்.
தமிழக இளைஞா்களுக்கு விழிப்புணா்வு தேவை: பயிற்சி நிறைவு செய்த தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சோ்ந்த அதிகாரி எம்.ஆா்.ரஸ்வத் கூறியதாவது: சிறு வயதிலிருந்தே ராணுவத்தில் சேர வேண்டும் என கனவு இருந்தது. அதற்காக தொடா்ந்து என்னை தயாா்படுத்திக் கொண்டேன். கல்லூரி பட்டப்படிப்பை நிறைவு செய்தவுடன், முதல் முயற்சியிலேயே ராணுவ அதிகாரிக்கான தோ்வில் தோ்ச்சி பெற்றேன்.
நிகழாண்டு மொத்தம் 342 அதிகாரிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதில் 8 போ் மட்டுமே தமிழகத்தைச் சோ்ந்தவா்கள். இதேபோல ஆண்டுதோறும் தமிழகத்திலிருந்து தோ்ச்சி பெறுபவா்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. ராணுவத்தில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணா்வு தமிழக இளைஞா்களுக்கு தேவை. ராணுவத்தில் தமிழா்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



