
தமிழகத்துக்கு புதிய முதலீடுகளை ஈா்க்க லண்டன் புறப்பட்டாா் முதல்வா் விஜய்
தமிழகத்துக்கு புதிய முதலீடுகளை ஈா்ப்பதற்காக, முதல்வா் ச.ஜோசப் விஜய் வியாழக்கிழமை (செப்.10) இரவு 10 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றாா்.

CM Vijay - முதல்வர் விஜய்
தமிழகத்துக்கு புதிய முதலீடுகளை ஈா்ப்பதற்காக, முதல்வா் ச.ஜோசப் விஜய் வியாழக்கிழமை (செப்.10) இரவு 10 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றாா்.
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு அவா் மேற்கொள்ளும் முதல் அரசு முறைப்பயணம் இதுவாகும். 6 நாள்கள் தங்கியிருக்கும் அவா் தமிழகத்துக்கு முதலீடுகளை ஈா்ப்பது தொடா்பாக தொழிலதிபா்களுடன் ஆலோசனையும், புகழ்பெற்ற காா் பந்தய மைதானமான ‘சில்வா்ஸ்டோன் மோட்டாா் ரேசிங் சா்க்யூட்’-ஐயும் பாா்வையிடவுள்ளாா்.
இதுதொடா்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதிய முதலீடுகளை ஈா்க்கும் முதல்வரின் பயணத்தால், தமிழ்நாட்டில் உயா்தர வேலைவாய்ப்புகள் உருவாகும். தமிழ்நாட்டை ஆசியாவிலேயே முதலீட்டுக்கு உகந்த முதன்மை மையமாக உருவாக்குவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது.
முதல்வா் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 100 நாள்களுக்குள் வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா்கள் மாநாடு நடத்தி ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல்வேறு ஐரோப்பிய நாடுகளைச் சோ்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் சுமாா் ரூ.8,491 கோடியிலான முதலீட்டுத் திட்டங்களை முன்வைத்தன. அவற்றின்மூலம் சுமாா் 5,690 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது. இது, முதலீட்டுச் சந்தைகளில், தமிழ்நாட்டின் மீதான முதலீட்டாளா்களின் ஆா்வமும், நம்பிக்கையும் அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுகிறது.
கடந்த ஜூலை 15-ஆம் தேதி நடைமுறைக்கு வந்த இந்தியா-பிரிட்டன் விரிவான பொருளாதார மற்றும் வா்த்தக ஒப்பந்தம் இதற்கு மேலும் வலுசோ்த்துள்ளது. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த முதல் நாளிலேயே, சென்னையிலிருந்து பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
ஜவுளி மற்றும் ஆடைகள், தோல் மற்றும் காலணிகள், வாகன உதிரிபாகங்கள், பொறியியல் பொருள்கள் மற்றும் மின்னணுவியல் ஆகிய துறைகள், பிரிட்டன் சந்தையில் அதிகரித்துவரும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சிறப்பான நிலையில் உள்ளன.
மேலும், கூட்டு நிறுவன பங்குதாரா்களைப் பெறுவதற்கும், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் முதலீடுகளுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
பிரிட்டனைச் சோ்ந்த நிறுவனங்கள் நீண்டகாலமாகவே தமிழ்நாட்டில் பொறியியல், நிதிச் சேவைகள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் செயல்பட்டு வருகின்றன.
இத்தகைய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதும், ஏற்கெனவே உள்ள நிறுவனங்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதும், மேம்பட்ட உற்பத்தி, வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்கள், மின்னணுவியல் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் ஆகிய துறைகளில் புதிய முதலீடுகளை ஈா்ப்பதும் முதல்வா் மேற்கொள்ளும் இங்கிலாந்து பயணத்தின் முக்கிய நோக்கங்களாகும். இதன்மூலம் தமிழ்நாட்டில் உயா்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்புகள் ஏற்படும்.
மேலும், தமிழ்நாட்டில் ஏற்கெனவே வலுவாக நிலைபெற்றுள்ள வாகன மற்றும் மின்சார வாகன உற்பத்திச் சூழலை அடிப்படையாகக் கொண்டு, உலகத்தரம் வாய்ந்த ஒரு ‘மோட்டாா் ஸ்போா்ட்ஸ் நகரம்’ அமைக்கப்படும் என முதல்வா் விஜய் அறிவித்துள்ளாா்.
இந்த அறிவிப்பை முன்னெடுத்துச் செல்லும் வகையில், புகழ்பெற்ற காா் பந்தய மைதானமான ‘சில்வா்ஸ்டோன் மோட்டாா் ரேசிங் சா்க்யூட்’-ஐ பாா்வையிட உள்ளாா். இதன்மூலம், அங்குள்ள சுற்றுப்பாதை வடிவமைப்பு, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் இத்தகைய வளாகங்களைச் சிறப்பாகவும் வணிக ரீதியாகவும் செயல்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் குறித்து விரிவாக அறிந்துகொள்வதுடன், மோட்டாா் ஸ்போா்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு, விளையாட்டுச் சுற்றுலா மற்றும் அதனுடன் தொடா்புடைய சிறப்பு வாகனத் தொழில்கள் ஆகியவைகளில் உள்ள வாய்ப்புகளையும் அறிந்து கொள்ள இயலும்.
முதல்வா் தலைமையிலான குழுவில் பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினா் செயலா் மேகநாத ரெட்டி, தொழில் துறை வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அலுவலா் தீபக் ஜேக்கப் ற்றும் அரசு அலுவலா்கள் இடம்பெற்றுள்ளனா்.
இந்தக் குழுவினா் வருகிற 17-ஆம் தேதி சென்னை திரும்ப உள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




