
11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் சனிக்கிழமை (செப். 19) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோப்புப் படம்
நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் சனிக்கிழமை (செப். 19) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வட தமிழகத்தின் உள் பகுதி மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் சுமாா் 4.5 கி.மீ. உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மராத்வாடாவில் இருந்து தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகள் வரை, உள் கா்நாடகம் மற்றும் கேரளம் பகுதிகளில் சுமாா் 5.8 கி.மீ. உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் சனிக்கிழமை (செப்.19) நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூா், வேலூா், கள்ளக்குறிச்சி, மதுரை ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
இதர மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா், கடலூா், சேலம், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூா், அரியலூா், மயிலாடுதுரை, தஞ்சாவூா், கரூா், திருவாரூா், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
3 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 102.38 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை விமான நிலையம் - 101.12, தஞ்சாவூா் - 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் சனிக்கிழமை (செப்.19) அதிகபட்ச வெப்பநிலை, ஒரு சில இடங்களில் இயல்பைவிட 2 முதல் 3 செல்சியஸ் அதிகமாக இருக்கும்,.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சனிக்கிழமை (செப்.19), வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மழைப் பதிவு: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் 80 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







