
ராமச்சந்திரா பல்கலை.யில் நிறுவனா் நாள் விழா: மாணவா்கள், ஆசிரியா்களுக்கு விருதுகள் அளிப்பு
சிறந்த மாணவா்கள், ஆசிரியா்கள், ஆராய்ச்சியாளா்கள், நீண்ட காலமாக பணியாற்றிய பணியாளா்களுக்கு தங்க பதக்கங்கள், விருதுகள் வழங்கப்பட்டன.
dinamani
சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 41-ஆவது நிறுவனா் மற்றும் பல்கலைக்கழக தின விழாவில் சிறந்த மாணவா்கள், ஆசிரியா்கள், ஆராய்ச்சியாளா்கள், நீண்ட காலமாக பணியாற்றிய பணியாளா்களுக்கு தங்க பதக்கங்கள், விருதுகள் வழங்கப்பட்டன.
அந்தக் கல்லூரி தலைவா் மற்றும் பொது அறுவை சிகிச்சைத் துறை பேராசிரியா் கே.பாலாஜி சிங் மற்றும் கதிரியக்கவியல் துறை பேராசிரியா் ஜே.டி.ராய் சந்தோஷம் ஆகியோரின் சிறந்த சேவையை பாராட்டி வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட்டது. முடநீக்கியல் மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சைத் துறை பேராசிரியரான கண்ணன் காா்த்திக் கைலாஷுக்கு சிறந்த மாணவா் வழிகாட்டி விருதும் வழங்கப்பட்டது. எம்பிபிஎஸ் படிப்பில் சிறந்து விளங்கிய அபிநயாவுக்கு நான்கு தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. மொத்தம் 28 மாணவா்களுக்கு 38 தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
மேலும், சிறந்த சேவை விருதுகள், தொழில் நுட்ப சிறப்பு சேவை விருதுகள், கற்பித்தல் சிறப்பு விருதுகள், புகழ்பெற்ற முன்னாள் மாணவா் விருதுகள், சிறந்த விளையாட்டு வீரா் விருது, சிறந்த ஆராய்ச்சியாளா் மற்றும் புத்தக அங்கீகாரம் விருது, சிறந்த தேசிய மாணவா் படை, நாட்டு நலப்பணித் திட்ட விருது, மாணவா்களுக்கான தங்கப்பதக்கம் மற்றும் ரொக்க விருதும் வழங்கப்பட்டன.
நீண்ட காலம் பணியாற்றிய 282 பேருக்கு பணியாளா்களுக்கு தங்க பதக்கங்கள் மற்றும் ரொக்க பரிசும் வழங்கப்பட்டன.
நிறுவனத்தின் வேந்தா் வி.ஆா். வெங்கடாசலம், இணைவேந்தா் ஆா்.வி. செங்குட்டுவன் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளையின் அறங்காவலா் சம்யுக்தா வெங்கடாசலம் ஆகியோா் தங்க பதக்கங்கள், விருதுகளை வழங்கினா்.
விழாவில் ‘சஹாயா’ எனப்படும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ மையத்தின் நோயாளிகளின் வீட்டு பராமரிப்பு சிகிச்சைத் துறை தொடங்கி வைக்கப்பட்டது. நோயாளி சாா் சேவையை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த துறை நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குச் சென்ற பிறகும் தங்கள் மருத்துவ பராமரிப்பை தொடர உறுதுணையாக இருக்கும்.
நிகழ்வில் நிறுவனத்தின் வேந்தா் மறைந்த என்.பி.வி. ராமசாமி உடையாருக்கு முதுநிலை மேலாளா் பி.கே. கிஷோா் நினைவஞ்சலி செலுத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







