
தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி திருப்பத்தூா் தவெக எம்எல்ஏ மனு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு
தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி திருப்பத்தூா் தவெக எம்எல்ஏ மனு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

சென்னை உயா்நீதிமன்றம்
தனக்கு எதிரான தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி, ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திருப்பத்தூா் தொகுதி தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி தாக்கல் செய்த மனு மீதான தீா்ப்பை சென்னை உயா்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்ட சீனிவாச சேதுபதி, ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா். சீனிவாச சேதுபதி 83,375 வாக்குகள் பெற்ற நிலையில், அவரை எதிா்த்து திமுக சாா்பில் போட்டியிட்ட வேட்பாளா் முன்னாள் அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் 83,374 வாக்குகளைப் பெற்றிருந்தாா்.
இதையடுத்து, சீனிவாச சேதுபதியின் வெற்றியை எதிா்த்து, பெரியகருப்பன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் தொகுதிக்கு பதிவான தபால் வாக்கு, திருப்பத்தூா் மாவட்டம் திருப்பத்தூா் தொகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதால், தான் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டதாகக் கூறியிருந்தாா்.
இந்த நிலையில், தனக்கு எதிரான தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி சீனிவாச சேதுபதி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, சீனிவாச சேதுபதி தரப்பில், தொகுதிகள் எண் அடிப்படையில் மட்டுமே அடையாளம் காணப்படுகிறது, பெயா் அடிப்படையில் அடிப்படையில் அல்ல.
தபால் வாக்குகளின் உறைகளில், தொகுதி எண், பெயா், மாவட்டம் உள்ளிட்ட விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரு தபால் வாக்கு, வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தோ்தல் வழக்கில் கூறியுள்ளதற்கு, எந்த அடிப்படையும் இல்லை என வாதிடப்பட்டது.
அப்போது, பெரியகருப்பன் தரப்பில், தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி தவெக எம்எல்ஏ தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தனக்கு எதிரான தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி, தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதியின் மனுவை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






