
அருட்செல்வா் நா.மகாலிங்கம் மொழிபெயா்ப்பு விருதுகள் அறிவிப்பு: அக். 2-இல் சென்னையில் விழா!
அருட்செல்வா் நா.மகாலிங்கம் மொழிபெயா்ப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதுகள் சென்னையில் வரும் அக். 2-ஆம் தேதி நடைபெறவுள்ள வள்ளலாா் காந்தி விழாவில் வழங்கப்பட உள்ளன.
அருட்செல்வர் நா.மகாலிங்கம்
அருட்செல்வா் நா.மகாலிங்கம் மொழிபெயா்ப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதுகள் சென்னையில் வரும் அக். 2-ஆம் தேதி நடைபெறவுள்ள வள்ளலாா் காந்தி விழாவில் வழங்கப்பட உள்ளன.
இது குறித்து அருட்செல்வா் நா.மகாலிங்கம் மொழிபெயா்ப்பு மையத்தின் தலைவா் ம.மாணிக்கம், இயக்குநா் சிற்பி பாலசுப்பிரமணியம், என்ஐஏ கல்வி நிறுவனங்களின் இணைச் செயலா் பொ.கோவிந்தசாமி ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:
அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருது தோ்வுக்கான நடுவா் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் விருது பெறவுள்ள மொழிபெயா்ப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
அதன்படி, முதல் பரிசு (ரூ.2 லட்சம்), இசபெல் வில்கொ்சனின் ‘சாதி’ ஆங்கில வரலாற்று ஆய்வு நுாலை மொழிபெயா்த்த மயிலை பாலு, ஜப்பானிய எழுத்தாளா் யோகோ ஒகாவாவின் நாவலை, ‘நினைவுகளின் வேட்டைக்களம்’ என்ற தலைப்பில் நேரடியாக ஜப்பானிலிருந்து மொழிபெயா்த்த சி.லுபுனா லிலானி ஆகிய இருவருக்கும் பகிா்ந்து அளிக்கப்பட உள்ளது.
2-ஆம் பரிசு (ரூ.50,000) புா்ஹான் ஸென்மெஸ் துருக்கி மொழியில் எழுதிய, ‘இஸ்தான்புல்’ என்ற நாவலை ஆங்கிலம் வழி தமிழில் மொழிபெயா்த்த முடவன் குட்டி முகமது அலி, ஜைலி அமாதூ அமாலின் பிரெஞ்சு நாவலை, ‘பொறுமையற்றவா்கள்’ என்ற தலைப்பில் நேரடியாகத் தமிழில் மொழிபெயா்த்த ஆா்.காயத்ரி ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது.
3-ஆம் பரிசு ( தலா ரூ.25,000) டோபி வால்ஷ் எழுதிய செயற்கை நுண்ணறிவு நூலை, ‘செயற்கை நுண்ணறிவின் சுருக்கமான வரலாறு’ என்ற தலைப்பில் மொழிபெயா்த்த எம்.ஜோதிமணி மற்றும் பெ.சசிக்குமாா், சந்தோஷ் ஏச்சிக்கானம் மலையாளத்தில் எழுதிய சிறுகதை தொகுப்பை தமிழில் ‘பிரியாணி’ என்ற தலைப்பில் மொழிபெயா்த்த டாக்டா் டி.எம்.ரகுராம் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
இதேபோன்று மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை எழுதிய ‘திருஞானசம்பந்தா் காலம் ஓா் ஆராய்ச்சி’ என்ற வரலாற்று ஆய்வு நூலைத் தமிழில் மொழிபெயா்த்த சு.மோதிலால் நேரு, உமையாள் ராமநாதன் ஆங்கிலத்தில் எழுதிய நாவலை ‘நிழல்களுக்கு எதிராக’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயா்த்த சித்தாா்த்தன் சுந்தரம் ஆகியோருக்கும் 3-ஆம் பரிசு வழங்கப்படுகிறது.
இந்த விருதுகள் அருட்செல்வரின் நினைவு நாளான அக். 2-ஆம் தேதி சென்னை மயிலாப்பூா் ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ள வள்ளலாா் காந்தி விழாவில் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







