எரிவாயு உருளை வெடித்ததில் இரு கடைகள் இடிந்து நாசம்
திருப்போரூரை அடுத்த கேளம்பாக்கம்- கோவளம் சாலையில் உள்ள துரித உணவகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு எரிவாயு உருளை வெடித்ததில் உணவகக் கட்டடமும், அருகில்
திருப்போரூரை அடுத்த கேளம்பாக்கம்- கோவளம் சாலையில் உள்ள துரித உணவகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு எரிவாயு உருளை வெடித்ததில் உணவகக் கட்டடமும், அருகில் இருந்த துணிக் கடை கட்டடமும் இடிந்து நாசமாயின.
கேளம்பாக்கம்- கோவளம் சாலையைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இவருக்குச் சொந்தமான வீட்டின் முன் இரு கடைகள் கட்டி வாடகைக்கு விட்டிருந்தார். ஒரு கடையில் துரித உணவகமும், மற்றொரு கடையில் துணிக் கடையும் நடத்தி வந்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு கடை முடிந்து துரித உணவக ஊழியர்கள் வழக்கம் போல் கடையை மூடிவிட்டுச் சென்றனர்.
இந்த நிலையில், நள்ளிரவு 2 மணிக்கு மேல் துரித உணவகத்தில் திடீரென்று பயங்கர சப்தம் கேட்டது. இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது, உணவகக் கட்டடமும், அருகில் இருந்த துணிக் கடையும் இடிந்து தரைமட்டமாகிக் கிடந்தன. மேலும், உணவகக் கட்டடத்தின் இரும்புக் கதவு பறந்து சென்று எதிரே இருந்த கட்டடத்தில் விழுந்தது. இதில், கடைகளின் பின்புறம் இருந்த வீட்டின் முன்புறச் சுவரும், மாடிச் சுவரும் இடிந்து விழுந்தன.
தகவலறிந்த சிறுசேரி தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து உணவகக் கட்டடத்தில் இருந்த எரிவாயு உருளைகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, தீ பரவாமல் தடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அன்று இரவு இடி, மின்னலுமாக இருந்ததால் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால், துரித உணவக ஊழியர்கள் அவசரத்தில் எரிவாயு உருளைகளை மூடாமல் விட்டுச் சென்றிருக்கலாம் எனவும், மின்சாரம் வந்தவுடன் எரிவாயு கசிந்து விபத்து நேரிட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
இதுகுறித்து கேளம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

