முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

முழு அடைப்புப் போராட்டம்: 90 சதவீதம் ஆதரவு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக உள்ளிட்ட கட்சியினர் வியாழக்கிழமை முழு அடைப்பு போராட்டத்தில்

News image

காஞ்சிபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர்.

Updated On :6 ஏப்ரல் 2018, 3:22 am IST

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக உள்ளிட்ட கட்சியினர் வியாழக்கிழமை முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்துக்கு 90 சதவீதத்தினர் ஆதரவு அளித்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சியினர் காஞ்சிபுரம் தேரடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். 
மேலும், இப்போராட்டத்தில் வணிகர் சங்கங்களின் பேரவை அமைப்புகள், தொழிற்சங்கத்தினர் உள்ளிட்டோர் ஆதரவு அளித்து, போராட்டத்தில் கலந்துகொண்டனர். போராட்டத்துக்கு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலர் க.சுந்தர் தலைமை வகித்தார். இதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், காஞ்சிபுரம் காந்தி சாலை தேரடியிலிருந்து, திமுகவினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேரணியாக காந்தி சாலையில் சென்றனர். 
அவர்களை தடுப்பதற்காக போலீஸார் வழக்கறுத்தீஸ்வரர் கோயில் அருகே தடுப்புகளை வைத்தனர். எனினும், தடுப்புகளையும் மீறி மூங்கில் மண்டபம் பகுதிக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.வி.மதியழகன், திமுக மாவட்டப் பொருளர் ஜி.சுகுமார், நகரச் செயலாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீஸார், அவர்களை அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனர்.
வாலாஜாபாத், உத்தரமேரூரில்...
வாலாஜாபாத், உத்தரமேரூர் பகுதியில் திமுகவினர் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். இதில் அய்யம்பேட்டை, கருக்குபேட்டை,வாலாஜாபாத், வாரனவாசி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரிய, சிறிய கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. வாலாஜாபாத் நகரில் கடைகள் அடைக்கப்பட்டு, மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
உத்தரமேரூரில், சாலை மறியலில் ஈடுபட்ட திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இப்போராட்டத்துக்கு, ஒன்றியச் செயலாளர் ஞானசேகரன், சாலவாக்கம் ஒன்றியச் செயலாளர் குமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர் நாகன், விவசாய அணி அமைப்பாளர் ஏழுமலை உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். 
வெறிச்சோடிய பட்டுச் சேலை, காய்கறி கடைகள்: முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், காமராஜர் சாலை, காந்தி சாலை, மேட்டுத் தெரு, சாலைத் தெரு, செங்கழு நீரோடை வீதி, பூக்கடைச் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டன. எப்போதும் பரபரப்புடன் காணப்படும் ராஜாஜி காய்கறி அங்காடி காலை முதலே அடைக்கப்பட்டிருந்தது. இதனால், வணிக கடைகள், காய்கறி அங்காடி என வெறிச்சோடி காணப்பட்டது. காஞ்சிபுரத்துக்கு பெயர் போன பட்டுச் சேலை கடைகளுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் காஞ்சிபுரத்துக்கு வருகை தருவர். இந்நிலையில், முழு அடைப்பு போராட்டத்தால், காந்தி சாலையில் உள்ள கூட்டுறவு, தனியார் பட்டுச் சேலை கடைகள் காலை முதலே மூடப்பட்டிருந்தன. இதனால், காஞ்சிபுரம் வந்த பட்டுச் சேலை வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 
75 சதவீத பேருந்துகளே இயக்கம்: உள்ளூர், வெளியூர் செல்லும் பயணிகளுக்காக போக்குவரத்துக் கழகம் சார்பில் 70 சதவீத பேருந்துகளே இயக்கப்பட்டன. வேலூர், சென்னை, திருப்பதி உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டன. குறிப்பாக, தனியார் பேருந்துகள் 90 சதவீதம் இயக்கப்படவில்லை. 
அஞ்சலகம் முற்றுகை: உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தொழிற்சங்கங்களின் சார்பில் ஒரு நாள் பொது வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது. காஞ்சிபுரம் தேரடி பகுதியில் திரண்ட சிஐடியு தொழிற்சங்கத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான செளந்தரராஜன், தொமுச மாவட்டச் செயலாளர் சுந்தரவரதன் ஆகியோர் தலைமையில் தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தொழிலாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் முக்கிய வீதிகளில் பேரணியாகச் சென்று, காஞ்சிபுரம் பழைய ரயில்வே சாலையில் உள்ள தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதுபோல், உத்தரமேரூரில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து நூற்றுக்கணக்கான மார்க்சிஸ்ட் கட்சியினர் அங்குள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு பூட்டுப் போட்டனர். அவர்களை போலீஸார் கைது, மாலையில் விடுவித்தனர்.
மதுராந்தகத்தில் ...
மதுராந்தகம் தொகுதி திமுக சார்பில், மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு, எம்எல்ஏ எஸ்.புகழேந்தி தலைமை வகித்தார். நகரச் செயலர் கே.குமார், ஒன்றியச் செயலர்கள் கண்ணன், சத்யசாய் உள்பட திமுக நிர்வாகிகள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 
மதுராந்தகம் காவல் ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின் தலைமையிலான போலீஸார், மறியலில் ஈடுபட்ட 70 பேரை கைது செய்தனர்.
மார்க்சிஸ்ட் கட்சியினர்
மார்க்சிஸ்ட் கட்சியின் மதுராந்தகம் கிளை சார்பில், பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு, மாநில குழு உறுப்பினர் சுகந்தி தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணராஜ், மதுராந்தகம் வட்டக் கிளைச் செயலர் வாசுதேவன், கட்சி நிர்வாகிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மதுராந்தகம் பஜார் வீதியில் உள்ள காந்தி சிலை அருகே இருந்து ஊர்வலமாக வந்து, மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
கடை அடைப்பு
மதுராந்தகம், சோத்துப்பாக்கம், கருங்குழி, அச்சிறுப்பாக்கம், தொழுப்பேடு, செய்யூர், கடப்பாக்கம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், மருந்து கடைகள், பழக்கடைகள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டு இருந்தன. நடைபாதையில் பூ விற்பவர்களும் மாலை 5 மணி வரை பூ வியாபாரம் செய்யாமல் தமது ஆதரவை தெரிவித்தனர். மதுராந்தகம்,செய்யூர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. மதுராந்தகத்தில் ஆட்டோக்கள் ஓடவில்லை. 
செய்யூரில்...
செய்யூர் தொகுதி திமுக சார்பில், சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் எல்லையம்மன் கோயில் அருகே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு, எம்எம்ஏ ஆர்.டி.அரசு தலைமை வகித்தார். இதில், மாவட்ட துணைச் செயலர் ஆர்.தசரதன், ஒன்றியச் செயலர்கள் ஏழுமலை (சித்தாமூர்), ராமச்சந்திரன் (இலத்தூர்), சரவணன் (திருக்கழுகுன்றம்),திமுக நிர்வாகிகள் வெளிக்காடு ஏழுமலை, வெடால் மு.ராமலிங்கம் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்யூர் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் தலைமையிலான போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
செங்கல்பட்டில்...
செங்கல்பட்டு மார்க்கெட்டில் துணிக்கடைகள், காய்கறி கடைகள், பூக்கடைகள் உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டதால், மார்க்கெட் பகுதி, ராஜாஜி தெரு, நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி கிடந்தன. 
மாமல்லபுரம் சுற்றுலா நகரத்தில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்ததால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உணவு விடுதி இல்லாமல் கடும் அவதிக்குள்ளாயினர். கடற்கரை பகுதி கடற்கரை கோயில் ,ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் இன்றியும், மக்கள் நடமாட்டம் இன்றியும் வெறிச்சோடிக் கிடந்தன. 
கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்கப்பெருமாள்கோயில், திருப்போரூர், புதுப்பட்டினம், கல்பாக்கம், திருக்கழுகுன்றம் பகுதிகளிலும் முழு கடையடைப்பு நடைபெற்றது. 
ஸ்ரீபெரும்புதூரில்...
 ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ந.கோபால் தலைமையிலான திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்டோர் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் கைது செய்தனர்.
கடைகள் அடைப்பு முழு அடைப்பு போராட்டம் காரணமாக ஸ்ரீபெரும்பதூர், படப்பை, சுங்குவார்சத்திரம் ஆகிய பகுதிகளில் 95 சதவீதத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.