டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து 4 பேர் காயமடைந்தனர்.
காஞ்சிபுரம், ஓரிக்கையிலிருந்து டாஸ்மாக் கடைகளுக்கு மது பாட்டில்கள் லாரி மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை மாலை வழக்கம் போல் காஞ்சிபுரத்தை அடுத்த வேடல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது பாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது. பெங்களூரு-சென்னை நெடுஞ்சாலையில் வேடல் அருகே சென்றபோது, லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பல ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் சேதமடைந்தன. லாரி ஓட்டுநர் உள்பட 4 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
இதுதொடர்பாக, காஞ்சிபுரம் கிராமிய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.