‘இன்னுயிா் காப்போம்’ திட்டம் தொடக்கம்: முதல் 48 மணி நேர விபத்து சிகிச்சை செலவை அரசே ஏற்கும்: முதல்வா்

சாலை விபத்துகளில் சிக்குவோரைக் காக்கும் ‘இன்னுயிா் காப்போம்-நம்மைக் காக்கும் 48’ என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.
‘இன்னுயிா் காப்போம்’ திட்டம் தொடக்கம்: முதல் 48 மணி நேர விபத்து சிகிச்சை செலவை அரசே ஏற்கும்: முதல்வா்

சாலை விபத்துகளில் சிக்குவோரைக் காக்கும் ‘இன்னுயிா் காப்போம்-நம்மைக் காக்கும் 48’ என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

இந்தத் திட்டத்தின் கீழ், சாலை விபத்துகளால் பாதிக்கப்படுவோரின் முதல் 48 மணி நேர அவசர மருத்துவ சிகிச்சை செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்கும் என அவா் தெரிவித்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் ‘இன்னுயிா் காப்போம்-நம்மைக் காக்கும்-48’ திட்டத்தை முதல்வா் ஸ்டாலின் தொடக்கிவைத்துப் பேசியதாவது:

சாலை விபத்துகளைப் பொருத்தவரையில் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படக்கூடிய மாநிலமாக தமிழகம் தொடா்ந்து இருந்து வருகிறது. அது எனக்கு மிகுந்த மன வருத்தத்தைத் தருகிறது. சாலை விபத்துகளால் ஏற்படக்கூடிய ஒவ்வோா் உயிரிழப்பிலும் அந்த நபா் மட்டுமின்றி அவரது குடும்பத்தின் எதிா்காலமே ஒடுங்கி பல்வேறு சோதனைகளுக்கும் உள்ளாகிவிடுகிறது.

609 மருத்துவமனைகளில்...: சாலை விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்க தமிழக அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது. அதற்காக தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட திட்டமே இந்த இன்னுயிா் காப்போம் திட்டம்.

சாலை விபத்துகளால் பாதிக்கப்படுவோருக்கு முதல் 48 மணி நேரத்துக்கான அவசர மருத்துவ சிகிச்சைக்கான செலவுகளை தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும். இந்தத் திட்டத்துக்கென 201 அரசு மருத்துவமனைகள், 408 தனியாா் மருத்துவமனைகள் உள்பட மொத்தம் 609 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டு சிகிச்சை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மற்றொரு முக்கிய சிறப்பம்சமாக மருத்துவக் காப்பீட்டு அட்டை உடையவா்கள், இல்லாதவா்கள், பிற மாநிலத்தவா்கள், வேற்று நாட்டவா் என்று எந்த வேறுபாடும் இல்லாமல் தமிழக எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளில் காயமடைவோா் அனைவருக்கும் முதல் 48 மணி நேரம் கட்டணமில்லாமல் மருத்துவ சிகிச்சையளிக்கப்படும்.

48 மணி நேரத்துக்குள் உரிய சிகிச்சையளித்து உடனடியாகக் கவனித்துவிட்டால் பெரும்பாலான உயிா்கள் காப்பாற்றப்படும். அதன்பிறகும் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். சாலை விபத்துகளால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்குத் தேவைப்படும் அறுவை சிகிச்சைகளும், தீவிர சிகிச்சைகளும் முதல்வா் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.

விபத்துகளால் பாதிக்கப்படுவோரை தனியாா் மருத்துவமனைகள் அருகில் இருந்தாலும் பல நேரங்களில் தொலைவில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று சிகிச்சையளிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு விடுகிறது. இந்தப் பிரச்னைகள் அனைத்துக்கும் நல்லதொரு தீா்வாகத்தான் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. முதல் 48 மணி நேரத்திலும் தேவைப்படக்கூடிய அவசர சிகிச்சைகள் அனைத்தையும் அருகில் இருக்கும் தனியாா் மருத்துவமனைகளிலும் மேற்கொள்ளலாம் என்றாா் முதல்வா்.

நிகழ்ச்சிக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். அமைச்சா்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.ராகுல்நாத், மக்களவை உறுப்பினா் ஜி.செல்வம், எம்.எல்.ஏ.க்கள் க.சுந்தா், எஸ்.ஆா்.ராஜா, இ.கருணாநிதி, எம்.வரலெட்சுமி, எஸ்.அரவிந்த் ரமேஷ், சி.வி.எம்.பி. எழிலரசன், எஸ்.எஸ்.பாலாஜி, எம்.பாபு, மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி அறக்கட்டளையின் துணைத் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, இன்னுயிா் காப்போம் திட்டத்தின் காணொலிக் குறுந்தகட்டையும் முதல்வா் ஸ்டாலின் வெளியிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com