இந்த ஆண்டு மட்டும் 1000 கோயில்களில் திருப்பணி மேற்கொள்ள நடவடிக்கை: அமைச்சர் பி.கே.சேகர்பாபு

இந்த ஆண்டு மட்டும் 1000 கோயில்களில் திருப்பணி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
தேர் வெள்ளோட்ட விழாவில் கலந்து கொண்ட அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அமைச்சர் தா.மோ.அன்பரசன், உத்தரமேரூர் எம்.எல்.ஏ.க.சுந்தர்,அறநிலையத்துறை இணை ஆணையர் பொன்.ஜெயராமன்.
தேர் வெள்ளோட்ட விழாவில் கலந்து கொண்ட அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அமைச்சர் தா.மோ.அன்பரசன், உத்தரமேரூர் எம்.எல்.ஏ.க.சுந்தர்,அறநிலையத்துறை இணை ஆணையர் பொன்.ஜெயராமன்.

இந்த ஆண்டு மட்டும் 1000 கோயில்களில் திருப்பணி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

காஞ்சிபுரம் அருகே சீட்டணஞ்சேரியில் சிவகாமசுந்தரி சமேத காளீசுவரர் திருக்கோயில் தேர் சிதிலமடைந்து இருந்ததால் கடந்த 82 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்து வந்தது. புதிய தேர் ரூ.80லட்சத்தில் உபயதாரர் நிதி உதவியுடன் வடிவமைக்கப்பட்டு அதற்கான வெள்ளோட்டம் நடைபெற்றது. புதிய தேரினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது, திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இதுவரையில் நிலுவையாக இருந்த கோயில் திருப்பணிகளை முடித்து கும்பாபிஷேகம் நடந்த கோயில்களின் எண்ணிக்கை 100 ஐயும் தாண்டியிருக்கிறது. தனியாருக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்துள்ளது. கடந்த ஆண்டு 1200கோயில்களுக்கு திருப்பணிகள் செய்திட உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மட்டும் 1000 கோயில்களுக்கு திருப்பணிகள் நடத்திடுமாறு தமிழக முதலமைச்சரும் அறிவுறுத்தி இருக்கிறார்.அந்த வகையில் அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு ஓடாமல் இருந்த தேர்கள்,சீரமைக்கப்பட வேண்டிய தெப்பக்குளங்கள், அந்தந்த கோயில்களின் ஸ்தல விருட்சங்கள் ஆகியனவற்றை அடையாளம் கண்டு அவற்றை சீரமைக்கும் பணிகளையும் தீவரப்படுத்தி இருக்கிறோம். இதற்கென கடந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.100கோடி நிதியும் முதலமைச்சர் ஒதுக்கி இருந்தார்.இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் மேலும் 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

சீட்டணஞ்சேரி காளீசுவர சுவாமி கோயிலில் 82 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற புதிய தேர் வெள்ளோட்டம்.

சுமார் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான கோயில்களுக்கும் திருப்பணிகளை தொடருமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். மிகவும் பழமை வாய்ந்த ஒரு கால பூஜைக்கு கூட வழியில்லாமலும்,போதிய நிதி ஆதாரம் இல்லாமலும் இருக்கிற கோயில்களை அடையாளம் கண்டு அவற்றை அதிக வருவாய் தரக்கூடிய கோயில்களோடு இணைக்கிற பணியையும் செய்து கொண்டிருக்கிறோம்.கடந்த காலங்களில் திருப்பணிகளை செய்ய விரும்புவோரிடமும் கையூட்டு பெறும் நிலையும் இருந்து வந்தது. தற்போது மு.க.ஸ்டாலின் ஆட்சியின் போது திருப்பணிகளை செய்யக்கூடியவர்கள் யாராக இருந்தாலும் அதற்கு அனுமதி வழங்கப்படும்.

அந்த வகையில் இந்த ஆட்சியானது நன்கொடையாளர்களை இருகரம் கூப்பி வரவேற்கிறது. ஆன்மீகத்தில் நாட்டம் உள்ளவர்களாகவும், பக்தி உள்ளவர்களாகவும் இருந்து அவர்கள் எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களையும் திருக்கோயில்களில் அறங்காவலர்களாக நியமியுங்கள் எனவும் முதல்வர் தெரிவித்திருக்கிறார். அறநிலையத்துறைக்கு புதிய செயலி அறிமுகம் இந்து சமய அறநிலையத்துறைக்கு என புதியதாக செயலி ஒன்றையும் அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இச்செயலி மூலம் குறைகளை பதிவிடலாம். குறைகளை பதிவிடும் போது சம்பந்தப்பட்ட கைபேசியில் தொடர்பு கொள்ளும் போது ஆட்கள் இல்லாமல் இருந்தால் தானாகவே அவர்கள் கூறுகின்ற குறைகளை பதிவாகி விடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அக்குறைகள் 15நாட்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட குறைகளை தீர்த்து வைக்கும் பணிகளிலும் அறநிலையத்துறை ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். தேர் வெள்ளோட்ட விழாவில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன், உத்தரமேரூர் எம்.எல்.ஏ.க.சுந்தர், அறநிலையத்துறை காஞ்சிபுரம் சரக இணை ஆணையர் பொன்.ஜெயராமன்,செயல் அலுவலர்கள் ப.பரந்தாமக்கண்ணன், ரா.வெங்கடேன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com