காஞ்சிபுரம்: ராணுவ மரியாதையுடன் வீரர் உடல் நல்லடக்கம்
By DIN | Published On : 16th June 2022 03:47 PM | Last Updated : 16th June 2022 03:47 PM | அ+அ அ- |

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் உத்தரபிரதேசத்தில் இறந்தவர் உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் குமாரசாமி நகர் அப்பாண்டைராஜ் மகன் ரமேஷ்(58). இவர் உத்தரப்பிரதேச மாநிலம் பெரேலி முகாமில் இந்தோ திபெத்தியன் எல்லைப் பாதுகாப்பு படையில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் செவ்வாய்க்கிழமை மாரடைப்பால் காலமானார்.
இதையும் படிக்க: காஞ்சிபுரத்தை சேர்ந்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர் உத்தரப் பிரதேசத்தில் சாவு
இவரது உடலை ராணுவ வீரர்கள் விமானம் மூலமாக உத்தரப் பிரதேசத்தில் இருந்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து காஞ்சிபுரத்துக்கு எடுத்துவரப்பட்டு அவரது குடும்பத்தினரின் முன்னிலையில் ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டது.
பின்னர் உடல் ராணுவ விதிமுறைகளின்படி குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இவருக்கு கீதாலட்சுமி என்ற மனைவியும், வினோத்குமார் என்ற மகனும் உள்ளனர்.
இவர் 1988-ம் ஆண்டு இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படையில் பணியில் சேர்ந்துள்ளார். இவர் காஷ்மீர், தில்லி, உத்தரப் பிரதேசம், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் எல்லை பாதுகாப்புப் படையில் பணியாற்றியிருந்தார். ரமேஷ் உடலுக்கு காஞ்சிபுரம் டி.எஸ்.பி. ஜீலியஸ்சீசர், காவல் ஆய்வாளர் ராஜகோபால் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.