காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோயிலில் தேரோட்டம்

காஞ்சிபுரம் தேவராஜசுவாமி திருக்கோயில் வைகாசித்திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் உற்சவர் வரதராஜப் பெருமாள் வியாழக்கிழமை தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோயிலில் தேரோட்டம்
காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோயிலில் தேரோட்டம்
Published on
Updated on
2 min read

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தேவராஜசுவாமி திருக்கோயில் வைகாசித்திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் உற்சவர் வரதராஜப் பெருமாள் வியாழக்கிழமை தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காஞ்சிபுரம் தேவராஜசுவாமி திருக்கோயில் வைகாசி திருவிழா கடந்த 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவினை முன்னிட்டு தினசரி பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்தார்.விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தங்கக் கருட வாகன சேவைக் காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் தேவராஜசுவாமி ஆலயத்திலிருந்து அதிகாலையில் புறப்பாடாகி காந்தி சாலையில் உள்ள தேரடிக்கு எழுந்தருளினார். தேரில் இருக்கும் பெருமாளை தரிசிக்க பக்தர்கள் வரிசையாக அனுமதிக்கப்பட்டனர்.அப்போது கூட்டம் அதிகமானாதால் கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாமல் காவல்துறையினர் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

தேர் சரியாக அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்டது. காஞ்சிபுரம் சரக டிஐஜி எம்.சத்தியப்பிரியா, எஸ்.பி.சுதாகர், சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், அறநிலையத்துறை காஞ்சிபுரம் சரக இணை ஆணையர் ரா.வான்மதி, உதவி ஆணையர் ஆ.முத்துரெத்தினவேலு, கோயில் நிர்வாக அறங்காவலர் ந.தியாகராஜன், செயல் அலுவலர் வெள்ளைச்சாமி உட்பட பலரும் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தனர். காஞ்சிபுரம் திருவேகம்பன் சிவாலய அறக்கட்டளை உட்பட பல்வேறு சங்கங்கள், வணிக நிறுவனங்கள் ஆகியனவும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

கோபத்துடன் சென்ற காஞ்சிபுரம் மேயர்

தேரை வடம் பிடித்து இழுத்து தொடக்கி வைப்பதற்காக தேரின் முன்பு நின்று கொண்டிருந்த முக்கியப்  பிரமுகர்களோடு காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜூம் நின்று கொண்டிருந்தார். அப்போது காவலர் ஒருவர் பெண்கள் யாரும் இங்கு நிற்கக்கூடாது எனக் கூறினார். மேயர் தான் நின்று கொண்டிருக்கிறார் என மேயரின் உதவியாளர் ஒருவர் சொல்லியும் கேட்காமல் அனைவரும் வெளியேறுங்கள் என காவலர் கூறியதால் கோபத்துடன் மேயர் தேரை வடம் பிடித்து இழுக்காமலேயே சென்று விட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com