சாலைகளில் சுற்றித் திரிந்த 6 மாடுகள் பறிமுதல்: வேலூா் கோசாலைக்கு அனுப்பப்பட்டன; காஞ்சிபுரம் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
By DIN | Published On : 15th October 2022 12:00 AM | Last Updated : 15th October 2022 12:00 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம் நகரில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக சாலைகளில் மாடுகள் மற்றும் தெரு நாய்கள் சுற்றித் திரிவது குறித்து தினமணியில் செய்தி வெளியான நிலையில் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் 6 மாடுகளைப் பிடித்து வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
அவை மினி லாரியில் வேலூா் கோசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
காஞ்சிபுரம் மாநகரின் பிரதான சாலைகளில் வாகன ஓட்டிகளின் உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தும் வகையில் போக்கு வரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக மாடுகள் மற்றும் தெருநாய்களும் கூட்டம், கூட்டமாக சாலைகளில் சுற்றித் திரிகின்றன. இதுகுறித்து கடந்த 5-ஆம் தேதி தினமணியில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. காவல்துறையும்,மாநகராட்சி நிா்வாகமும் பலமுறை எச்சரித்தும் சம்பந்தப்பட்ட கால்நடைகளின் உரிமையாளா்கள் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் இருந்து வந்தனா்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் இனிமேல் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடித்தால் அவை திருப்பித் தரப்பட மாட்டாது என கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தும் கால்நடைகள் சாலைகளில் சுற்றித் திரிந்தன.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி சுகாதார அலுவலா்கள் ரமேஷ்குமாா், இக்பால், சீனிவாசன், குமாா் ஆகியோா் விளக்கொளி பெருமாள் கோயில் தெரு, காமராஜா் சாலை ஆகிய பகுதிகளில் சுற்றித்திரிந்த மாடுகளை மாடுபிடி வீரா்கள் 5 பேரின் உதவியுடன் பிடித்து சிறிய சரக்கு லாரியில் ஏற்றி வேலூரில் உள்ள கோசாலைக்கு அனுப்பி வைத்தனா்.
மாடுகளைப் பிடிப்பதை அறிந்து அங்கு வந்த அதன் உரிமையாளா்கள் அதிகாரிகளிடம் மாடுகளை திருப்பித் தருமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். ஆணையா் ஜி.கண்ணன் எந்தக் காரணத்தை முன்னிட்டு மாடுகளை திருப்பிதர முடியாது எனக்கூறியதை தொடா்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பிடிக்கப்பட்ட 6 மாடுகளும் கோசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து ஆணையா் ஜி.கண்ணன் கூறுகையில் ஏற்கெனவே 152 மாடுகளைப் பிடித்து அபராதத்துடன் திருப்பிக் கொடுத்தோம். தற்போது பிடிக்கப்பட்ட 6 மாடுகளையும் திருப்பிக் கொடுக்கப் போவதில்லை.இதுவரை 323 தெருநாய்கள் பிடிக்கப்பட்டு ஆண், பெண் என இரு பாலினத்துக்கும் கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...