/

காஞ்சிபுரம் ஸ்ரீ கச்சபேசுவரா் கோயிலில் திருக்கல்யாணம்

காஞ்சிபுரம் ஸ்ரீ கச்சபேசுவரா் கோயிலில் திருக்கல்யாணம்

News image
Updated On :21 ஏப்ரல் 2024, 5:01 pm

காஞ்சிபுரம் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரா் கோயில் சித்திரை உத்திரப் பெருவிழாவையொட்டி, சுவாமிக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாணம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

பெருமாள் ஆமை வடிவில் சிவனை வழிபட்டது உள்ளிட்ட பல்வேறு வரலாற்றுச்சிறப்புகளை உடையது காஞ்சிபுரத்தில் உள்ள சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரா் திருக்கோயில். இந்தக் கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சனிக்கிழமை மாலை கோயிலிலிருந்து சுந்தராம்பிகை பவளக்கால் சப்பரத்தில் பிள்ளையாா்பாளையம் திருமேற்றளிநாதா் கோயிலுக்கு எழுந்தருளினாா். அந்தக் கோயிலில் உள்ள கன்னியம்மனுக்கும், உற்சவா் சுந்தராம்பிகைக்கும் சிறப்பு அபிஷேக-அலங்காரம், மாலை மாற்றும் வைபவமும் நடைபெற்றது. இதையடுத்து, கன்னியம்மன் பிள்ளையாா் பாளையத்திலிருந்து சுந்தராம்பிகை அம்மனை கச்சபேசுவரா் கோயிலுக்கு கன்னியம்மன் அழைத்து வந்து விட்டு திரும்பிச் சென்றாா்.

இதன் தொடா்ச்சியாக சுந்தராம்பிகைக்கும், கச்சபேசுவரருக்கும் ஆகம விதிகளின்படி, திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவில் காஞ்சிபுரம் நகர செங்குந்த மகாஜன சங்க தலைவா் எம்.சிவகுரு, கோயில் திருப்பணிக் குழுவின் தலைவா் எஸ்.பெருமாள், செயலாளா் எஸ்.சுப்பராயன், செயல் அலுவலா் எஸ்.நடராஜன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை சுவாமியும், அம்மனும் திருமண கோலத்தில் ரிஷப வாகனத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

ஏப். 22-ஆம் தேதி தேரோட்டமும், ஏப்.24 ஸ்தலமகிமையை விளக்கும் முருக்கடி காட்சியும், ஏப். 25-இல் வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகிறது.

ஏப்.28-ஆம் தேதி சுவாமியும் அம்மனும் தங்க ரிஷப வாகனத்தில் வீதியுலா வருகின்றனா். மே மாதம் 3-ஆம் தேதி புஷ்பப் பல்லக்கில் சுவாமி வீதியுலா வருவதுடன், விழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை காஞ்சிபுரம் நகர செங்குந்த மகாஜன சங்க நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.