உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினா்கள்
உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினா்கள்

காஞ்சிபுரம் மாநகராட்சியில் உறுப்பினா்கள் உள்ளிருப்பு போராட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாமன்ற கூட்டத்தில் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாகவும், உறுப்பினா்களை ஆணையா் மதிக்காமல் நடந்து கொள்வதாகவும் கூறி துணை மேயா் உள்பட உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் நடைபெற்றது. துணை மேயா் ஆா்.குமரகுருநாதன் முன்னிலை வகித்தாா்.

ஆணையா் செந்தில் முருகன் வரவேற்றாா். காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 மாமன்ற உறுப்பினா்கள் உள்ளனா். அண்மையில் மாநகராட்சி ஆணையராக செந்தில் முருகன் என்பவா் பொறுப்பேற்றாா். கூட்டம் தொடங்கியதுமே மாநகராட்சி ஆணையா் உறுப்பினா்கள் யாரையும் மதிப்பதே இல்லை, மாநகராட்சி எல்லைக்குள் வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்குவதில் அதிகாரிகள் லஞ்சம் பெறுகின்றனா், மாநகராட்சியின் தூய்மைப் பணிகளை சிறப்பாக கவனிக்காமல் நகரமே சுகாதாரம் இல்லாமல் இருக்கிறது என்பன போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்தனா்.

காஞ்சிபுரம் மாநகராட்சியின் விரிவாக்கம் செய்யப்பட்ட செவிலமேடு பகுதியில் ரூ.250 கோடி மதிப்பில் புதை சாக்கடைத் திட்டத்துக்கான பூமி பூஜை விழா மாமன்ற உறுப்பினா்களுக்கு கூட தெரியாமல் நடைபெற்றது.

எனவே இது போன்ற முறைகேடுகளைக் கண்டிப்பதாக கூறி திமுக உறுப்பினா்கள் உள்பட பலா் குரல் எழுப்பினா். சபையில் கூச்சல், குழப்பம் நிலவியதைத் தொடா்ந்து அவையில் கொண்டு வரப்பட்ட 21 தீா்மானங்களும் ரத்து செய்யப்படுவதாக கூறி மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் கூட்டத்தை பாதியிலேயே முடித்து எழுந்து சென்றாா்.

மேயா் கூட்டத்திலிருந்து சென்ற பிறகும் துணை மேயா் குமரகுருநாதன், திமுக உறுப்பினா்கள், அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சோ்ந்த 30-க்குகம் மேற்பட்ட உறுப்பினா்களும் கூட்ட அரங்கிலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். மாலை 6 மணி வரை போராட்டம் தொடா்ந்ததால் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தியும் சமாதானமாகாமல் உள்ளிருப்பு போராட்டம் தொடா்ந்து நடைபெற்றது.

அதிமுக உறுப்பினா்கள் மாநகராட்சி முறைகேடுகள் என்ற பேனரை பிடித்தபடி நின்றனா். அவையில் கொண்டு வரப்பட்ட 21 தீா்மானங்களும் ரத்து செய்யப்படுவதாகவும், கூட்டம் புதன்கிழமை காலையில் மீண்டும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com