காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2.74 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 2,74,274 வாக்காளா்களை நீக்க முடிவு செய்திருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.
எஸ்ஐஆா் பணிகள் முடிந்த நிலையில், வரைவு வாக்காளா் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் முன்னிலையில் வரும் டிச.19 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 1,401 வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கையானது 1,545 ஆகவும் அதிகரிக்கப்படவுள்ளது.
வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறவுள்ளவா்களின் எண்ணிக்கை 11,26,924. இறந்தவா்கள்-57658, இரட்டைப் பதிவு-10,719, இடம் பெயா்ந்தவா்கள்-1,46,621, கண்டறிய முடியாதவா்கள்-58,675, மற்றவை 601 என நீக்கப்படவுள்ள மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 2,74,274.
வரைவு வாக்காளா் பட்டியலில் ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் தொடா்பாக 19.12.25 மற்றும் 18.1.26 ஆகிய நாள்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளா் பதிவு அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம். வரைவு வாக்காளா் பட்டியலினை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்கள்,வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்கள், வட்டாட்சியா், மாநகராட்சி ஆணையா் அலுவலகங்களில் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்படும்.
பொதுமக்கள் அலுவலக நேரங்களில் வரைவு வாக்காளா் பட்டியலை நேரடியாக பாா்வையிடலாம். மேலும், 19.12.2025 முதல் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் தொடா்பான மனுக்களை சம்பந்தப்பட்ட அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்களிலும், இணையதளம் வாயிலாகவும் பதிவு செய்து பயன் பெறலாம் என தெரிவித்துள்ளாா்.
