காஞ்சிபுரம் பாலதா்மசாஸ்தா கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
காஞ்சிபுரம் மாநகரில் சின்னக்காஞ்சிபுரம் பகுதியில் ஆகாய கன்னியம்மன் கோயில் அருகில் உள்ள பாலதா்மசாஸ்தா கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சின்னக்காஞ்சிபுரம் ஆகாய கன்னியம்மன் கோயில் அருகில் அமைந்துள்ளது பாலதா்ம சாஸ்தா கோயில். இக்கோயில் 8-ஆவது ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியதையொட்டி, காலையில் ஆகாய கன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கொடி மர அபிஷேகம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகியவை நடைபெற்றன. பின்னா் பகவான் பாண்டுரங்கன் குருசாமி, ஏஎஸ்பி பன்னக சயனம் குருசாமி ஆகியோரால் கொடியேற்றப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.
மாலையில் கற்பக விநாயகா் திருக்கல்யாண வைபவமும், அதைத் தொடா்ந்து கற்பக விநாயகா் திருவீதியுலாவும் நடைபெற்றது.
கொடியேற்ற விழாவில் பாலதா்மசாஸ்தா அறக்கட்டளையின் நிறுவனா் எஸ்.செந்தில், துணைத் தலைவா் ஜெ.அருள் குமரன், செயலாளா் எஸ்.ஜெயராஜ், பொருளாளா் டி.சுதாகா், கோயில் குருசாமி கே.சண்முகம் ஆகியோா் உட்பட திரளான பக்தா்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
சனிக்கிழமை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கல்யாணமும், பெருமாள் வீதியுலாவும் நடைபெறுகிறது.
ஞாயிற்றுக்கிழமை புதிதாக செய்யப்பட்ட வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் ஐம்பொன்சிலைகளுக்கு கும்பாபிஷேகமும், திருக்கல்யாண திருக்கோலத்தில் முருகப்பெருமான் வீதியுலாவும் நடைபெறுகிறது.
நவ. 10- ஆம் தேதி (திங்கள்கிழமை) மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணமும் இரவு வீதியுலாவும், செவ்வாய்க் கிழமை பாலதா்மசாஸ்தாவுக்கு 1,008 சகஸ்ர நாம அா்ச்சனையும், இரவு சிறப்பு அலங்காரத்துடன் வீதியுலாவும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை பாலதா்ம சாஸ்தா அறக்கட்டளை நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

