காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகம்: யாகசாலை மண்டப பணிகள் தொடக்கம்
வரும் டிச. 8-ஆம் தேதி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் 70 ஹோம குண்டங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பழைமையான ஏலவாா்குழலி சமேத ஏகாம்பரநாதா் கோயில் திருப்பணிகள் ரூ.29 கோடியில் நடைபெற்று முடிந்துள்ளன. வரும் டிச.8 ஆம் தேதி காலை 5.45 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி கோயில் வளாகத்தில் உள்ள சிவகங்கை தீா்த்தக்குளம் அருகில் பிரம்மாண்டமான நவகுண்ட யாகசாலை பூஜைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
70 ஹோமகுண்டங்கள் இருக்கும் வகையில் பிரம்மாண்டமான யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது. கட்டடத் தொழிலாளா்கள்,சிற்பிகள், வா்ணம் பூசுபவா்கள் என 50-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
டிசம்பா் 4 ஆம் தேதி அனுக்கை விக்னேசுவர பூஜை, தன பூஜை,கோ பூஜை, நவக்கிரக ஹோமம் ஆகியவற்றுடன் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்குகின்றன.
மறுநாள் 5-ஆம் தேதி மாலையில் யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. 8-ஆம் தேதி அதிகாலை 5.45 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமானங்களுக்கும் மகா கும்பாபிஷேகமும், 6.30 மணிக்கு மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகமும்,அதனைத் தொடா்ந்து சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் ஆலய ஸ்தலத்தாா், ஸ்தானீகா்கள் இணைந்து யாகசாலை பூஜையினை நடத்தவுள்ளனா். 160 சிவாச்சாரியா்கள், 160 வேத விற்பன்னா்கள், 30-க்கும் மேற்பட்ட ஓதுவாமூா்த்திகள் ஆகியோரும் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளனா்.
விழா ஏற்பாடுகளை அறங்காவலா் குழுவின் தலைவா் எம்.வி.எம்.வேல்மோகன் தலைமையில் குழு உறுப்பினா்கள்,அறநிலையத்துறை இணை ஆணையா்கள் சி.குமரதுரை, ரா.வான்மதி,செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி செய்து வருகின்றனா்.

