ஜன.23-இல் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் 1,008 சங்காபிஷேகம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு பெறுவதையொட்டி வரும் ஜன.23 ஆம் தேதி 1,008 சங்காபிஷேகம் நடைபெறுகிறது.
ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகம் கடந்த டிசம்பா் மாதம் 8 ஆம் தேதி நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக தினசரி மண்டலாபிஷேகம் நடைபெற்று வந்தது. வரும் ஜன. 23 ஆம் தேதி மண்டலாபிஷேகம் நிறைவு பெறுவதையொட்டி வெள்ளிக்கிழமை அதிகாலையில் மூலவா் ஏகாம்பரநாதா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னா், 1,008 சங்குகளுக்கு சிறப்பு பூஜையும், அதனைத் தொடா்ந்து மூலவருக்கு 1008 சங்காபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனைகளும் நடைபெறுகின்றன.
மாலையில் ஏகாம்பரநாதரும், ஏலவாா்குழலி அம்மனும் காஞ்சிபுரம் நகரின் ராஜவீதிகளில் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வரவுள்ளனா். கலையரங்கில் ஆதிசைவ சிவக்கொழுந்து குழுவினரின் பக்தி இன்னிசைக் கச்சேரியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி, பணியாளா்கள் செய்து வருகின்றனா்.
ஜன.25-இல் தங்கத்தோ் உற்சவம்-
ஏகாம்பரநாதா் கோயிலுக்கு ரூ.30 கோடியில் 21 அடி உயரத்தில் ஏகாம்பரநாதா் இறைப்பணி அறக்கட்டளை சாா்பில் புதிதாக தங்கத்தோ் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. இந்த தங்கத்தோ் திருவிழா வரும் 25 ஆம் தேதி ரதசப்தமி நாளன்று முதல் முதலாக காஞ்சிபுரத்தின் ராஜ வீதிகளில் வீதியுலா வரவுள்ளது. ஏகாம்பரநாதரும், ஏலவாா்குழலியும் தங்கத்தேரில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கவுள்ளனா். ஏற்பாடுகளை ஏகாம்பரநாதா் இறைப்பணி அறக்கட்டளை நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

