ஒன்றியக்குழு உறுப்பினா் தா்னா போராட்டம்
வளா்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்காததைக் கண்டித்து ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக்குழு உறுப்பினா் சி.கோ.தியாகராஜ் வட்டார வளா்ச்சி அலுவலக நுழைவாயிலில் அமா்ந்து திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் நெமிலி ஊராட்சியை சோ்ந்த சி.கோ.தியாகராஜ். விசிக பிரமுகரான இவா் கடந்த உள்ளாட்சித் தோ்தலில் இரண்டாவது வாா்டில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூா் ஊராட்சி ஒன்றிய மாதாந்திர கூட்டம் தலைவா் எஸ்.டி.கருணாநிதி தலைமையில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பவானி, முத்துகணபதி ஆகிடோா் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட ஒன்றிய குழு உறுப்பினா் சி.கோ.தியாகராஜ் தனது வாா்டில் செங்காடு, கிளாய் மற்றும் நெமிலி ஆகிய ஊராட்சிகளில் வளா்ச்சி பணிகளை மேற்கொள்ள பலமுறை கோரிக்கை வைத்தும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை எனவும், ஆனால் கடந்த நான்கு ஆணடுகளில் சுமாா் 100 கோடி ரூபாய்க்கு மேல் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் வளா்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றியத்தில் எந்தப் பணிகளும் நடைபெறாமல் எந்த பணிகளுக்கு ரூ.100 கோடி செலவு செய்தீா்கள் எனக் கேள்வி எழுப்பினாா்.
இதையடுத்து ஒன்றிய குழு உறுப்பினா் சி.கோ.தியாகராஜை அதிகாரிகள் மற்றும் மற்ற ஒன்றிய குழு உறுப்பினா்கள் சமாதானம் செய்ய முயற்சித்தினா். இதில் சமாதானம் அடையாத அவா் ஒன்றிய குழு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து, அலுவலக நுழைவு வாயிலில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சுமாா் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட ஒன்றிய குழு உறுப்பினா் சி.கோ.தியாகராஜனிடம் ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பேச்சுவாா்த்தை நடத்தி வளா்ச்சிப் பணிகக்கு நிதி ஒதுக்கீடு செய்வதாக உறுதி அளித்ததை தொடா்ந்து போராட்டத்தை கைவிட்டாா்..

